எம்ஜிஆரின் சிலையை அகற்ற திமுக பேரூராட்சி தலைவர் முயற்சி - முன்னாள் எம்எல்ஏ ஆதங்கம்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையை அகற்ற திமுக பேரூராட்சித் தலைவர் முயற்சிப்பதாக முன்னாள் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையை அகற்ற திமுக பேரூராட்சித் தலைவர்
முயற்சிப்பதாக முன்னாள் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை
தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் வெளியே செல்லுகின்ற பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவுச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.
ரூ.4 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் அரூர் பேருந்து நிலையம்
இந்த நிலையில் அரூர் பேருந்து நிலையம் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது பேருந்து நிலையம் பணிகள் முடிவுற்று, தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை இடையூறாக இருப்பதாகவும், அந்த சிலையை அகற்ற வேண்டும் என பேரூராட்சியில் துணை தலைவர் முயற்சிப்பதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து பேசியதாக கூறப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர். முருகன்
முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பேருந்து நிலையத்தில் உள்ள சிலை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், வணிக வளாகங்களை ஒட்டி இருந்து வருகிறது.
இதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவை சேர்ந்த பேரூராட்சி துணை தலைவர் அகற்ற வேண்டும் என முயற்சித்து வருவதாகவும், அந்த சிலையை அகற்றக் கூடாது என வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேரூராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. அப்பொழுது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எம்ஜிஆர் சிலையை அகற்றும் நடவடிக்கை, திட்டம் ஏதும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து உயர்நீதிமன்றம், வழக்கு தொடுத்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்அ.முருகனுக்கு சிலையை அகற்றும் நடவடிக்கை இல்லை என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். மேலும் சிலை யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், வணிக வளாகங்களை ஒட்டி இருக்கிறது. இதனை அப்புறப்படுத்த கூடாது அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன்.
அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் எம் ஜி ஆர் மீது உள்ள பற்றால் தினந்தோறும் வணங்கி வருகின்றனர். ஆனால் இதனை பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணியை காரணம் காட்டி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேரூராட்சி துணை தலைவராக இருக்கும் திமுகவைச் சார்ந்த சூர்யா தனபால், சிலையை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதாக கூறி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்துகின்ற வகையில் இல்லை, ஒதுக்குப்புறமாக இருந்து வருகிறது.
அந்த சிலையை அகற்றக் கூடாது. முதலமைச்சரே எம்ஜிஆர் திரைப்படங்களை பார்த்திருப்பதாகவும், ரசித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சிலையை அகற்றுவதற்கு இந்த அரசு உடன்படக்கூடாது. இதற்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.