உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
கடந்த அத்தியாயங்களில் தேசிய மறுமலர்ச்சி இயக்கம் என்ற பகுதியில் சீர்திருத்த இயக்கங்கள் குறித்துப் படித்தோம். பாளையக்காரர்கள் புரட்சி, வேலூர் சிப்பாய்க் கலகம் உள்ளிட்ட தமிழ்நாட்டு சீர்திருத்த இயக்கங்கள் பற்றியும் படித்தோம். இதில் தலைவர்கள் உருவாதல், விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள், காலக்கிரம வரிசைகள், பிரிட்டிஷார் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்துப் பார்க்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் கல்வியின் நிறுவனர் ரத்தினம் 'ஏபிபி நாடு'விடம் விரிவாகப் பேசினார்.
''போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை பாடத்திட்டத்தைப் பார்த்து தலைப்பு வாரியாக அல்லாமல், காலக்கிரம வரிசையில் தமிழக, இந்திய வரலாற்றை ஒப்பிட்டுப் பார்த்துப் படிக்க வேண்டும்.
தலைவர்கள் உருவாதல்
இந்தப் பகுதியில் அரசியல் தலைவர்கள் எப்படி விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டனர்? போராட்டத்தில் அவர்களின் பங்கு என்ன? தலைவர்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தனர்? அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார், யார்? அவர்கள் கலந்துகொண்ட போராட்டங்கள் என்னென்ன? தலைவர்கள் நடத்தி வந்த பத்திரிகைகள், எழுதிய புத்தகங்கள் எவை? தலைவர்கள் சார்ந்த முக்கிய வருடங்கள், தலைவர்களின் பொன்மொழிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இதில் அன்னிபெசன்ட் உள்ளிட்ட பெண் தலைவர்கள் குறித்துத் தெளிவாகப் படிக்க வேண்டியது அவசியம்.
உதாரணத்துக்கு மகாத்மா காந்தி குறித்துப் படிக்கும்போது, காந்தி உருவாக்கிய ஒரே ஒரு அமைப்பு எது? எந்த இடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், காந்தி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்? தீண்டாமைக்கு எதிரான கூட்டமைப்பை காந்தி எந்த ஆண்டு ஏற்படுத்தினார்? காந்தி நடத்தி வந்த பத்திரிகையின் பெயர் என்ன? உள்ளிட்ட கேள்விகள் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ளன.
பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள்
பத்திரிகை, செய்தித்தாள்களின் பெயர், எழுதப்பட்ட மொழி, அவை தொடங்கப்பட்ட ஆண்டு, இடம், பத்திரிகையின் ஆசிரியர் குறித்த கேள்விகள் முக்கியமானவை. இவற்றில் இருந்து 100 சதவீதம் நிச்சயம் கேள்விகள் கேட்கப்படும். பொருத்துக முறையில், இதைப் பல்வேறு பத்திரிகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் படிக்க வேண்டும்.
புத்தகங்கள் சார்ந்த கேள்விகள்
புத்தகங்கள் பகுதியில் இருந்தும் கட்டாயம் கேள்விகள் கேட்கப்படும். தலைவர் எழுதிய புத்தகங்களின் பெயர், அதிலுள்ள சிறப்பம்சங்கள், குறிப்பிட்ட நூலை எழுதியவரின் பெயர் என்ற வகையில் கேள்விகள் கேட்கப்படலாம். எது சரி, எது தவறு என்று வாக்கியங்களில் இருந்து சரியான தெரிவைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். இந்தியா மற்றும் தமிழக அளவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்
இந்தப் பகுதியில் இந்திய அளவில் விடுதலைப் போராட்டத்தின் நிலைகள் குறித்தும் படிக்க வேண்டியது அவசியம். அதேபோலத் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள் குறித்தும் படிக்க வேண்டும்.
1905 - வங்கப் பிரிவினை மற்றும் சுதேசி இயக்கம்,
1906- முஸ்லிம் லீக் உருவாதல்
1907- சூரத் பிளவு
1909- மிண்டோ மார்லி சீர்திருத்தம்
1911- வங்கப் பிரிவினை திரும்பப் பெறுதல்
1914- கொமகட்டா மாரு (Komagata Maru incident) நிகழ்வு
1915- மகாத்மா காந்தி திரும்புதல்
1916- லக்னோ உடன்படிக்கை, தன்னாட்சி இயக்கம்
1917- காந்தியின் முதல் சத்தியாகிரகம் தொடங்குதல் என்பது மாதிரியான காலக்கிரம வரிசைகளை சரியாகப் படித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு வரிசைகளில் இருந்து கட்டாயம் கேள்விகள் கேட்கப்படும்.
பிரிட்டிஷார் கொண்டுவந்த சீர்திருத்தங்கள்
பிரிட்டிஷார்களுக்கு எதிராக யாரும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதற்காகவே பிரிட்டிஷார்களாலேயே இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அவர்கள் வந்ததால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்று ஆராய்ந்து படிக்க வேண்டும். பிராந்தியங்களைத் திறம்பட நிர்வகிக்கும் வகையில், ஆட்சிப் பணி அதிகாரிகளை உருவாக்கவும் பல்வேறு மொழிகள் பேசும் ஒரு நாட்டில், தொடர்புக்காக பொதுவான ஒரு மொழி தேவை என்ற வகையிலும் கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்தனர்.
பிரிட்டிஷாரின் நிலச்சீர்திருத்தம், கல்வி முறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்துப் படிக்க வேண்டும். நிலச்சீர்திருத்தம் பகுதியில், மகல்வாரி, ரயத்வாரி, ஜமீன்தாரி முறைகள் குறித்தும் வேளாண்மைத் துறையில் அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பற்றியும் விரிவாகப் படிக்க வேண்டும்.
வைசிராய்கள்
வைசிராய்களின் பணி குறித்தும் படிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பணியாற்றிய வைசிராய்கள் குறித்துப் படிக்க வேண்டும். டல்ஹெளசி, கர்சன், கானிங் பிரபு, வில்லியம் பெண்டிங் பிரபு உள்ளிட்டோர் பற்றிப் படிக்க வேண்டியது முக்கியம்.
ஐரோப்பியர்களின் வருகை
டச்சு, போர்ச்சுகீசியர்கள், ஆங்கிலேயர்கள் வருகை, எந்த ஆண்டுகளில் எங்கு வந்து இறங்கினர், அவர்கள் உருவாக்கிய துறைமுகம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
தமிழ்நாட்டு அளவில் விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் குறைவாகவே இருந்தாலும் ஆளுமைகள் குறித்து அதிகம் படிப்போம். வந்தவாசி போர், வேலூர்க் கலகம், உப்பு சத்தியாக்கிரகம், சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு ஆகியவை குறித்துப் படிப்போம்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் படிக்க வேண்டும். 1907-ல் சூரத்தில் சூரத் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாட்டு அளவில் அந்த மாநாட்டில் வஉசி சென்று கலந்துகொண்டதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றியதற்கான காரணம் என்ன?- இந்திய அளவில் 1905-ல் நடைபெற்ற வங்கப் பிரிவினையே இதற்குக் காரணம். ஏற்கெனவே போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது.
காலக்கிரம நிகழ்ச்சிகள்
1916-ல் பிராமணர்களுக்கு எதிராக தென் இந்தியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும். அதே ஆண்டில் நீதிக்கட்சி தொடங்கப்படும். 1919-ல் வெற்றி பெறுவர். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகம் நடக்கும். 1937-ல் நீதிக்கட்சி சார்பில் குலக்கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தும். 1940களுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் தோன்றும். 1969-ல் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்படும். 1996-ல் மெட்ராஸ் மாவட்டம், சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
இந்த வரிசையைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். இதில் இருந்து 'பொருத்துக' முறையில் கேள்விகள் கேட்கப்படலாம்.
விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
இந்திய அளவில் உஷா மேத்தா, அன்னி பெசன்ட் அம்மையார், சரோஜினி நாயுடு உள்ளிட்டோர் குறித்துப் படிப்போம். அதேபோலத் தமிழக அளவில் பெண்களின் பங்கு பற்றிப் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து போராடி, சிறைக்குச் சென்ற முதல் பெண் பத்மாசனி அம்மாள், விடுதலைப் போராளி துர்கா பாய் தேஷ்முக், பரத நாட்டியத்துக்கு வடிவம் கொடுத்து, கலாஷேத்திராவைத் தொடங்கிய ருக்மணி தேவி அருண்டேல், அஞ்சலை அம்மாள் ஆகியோர் முக்கியமானவர்கள்.
திரைத் துறை மற்றும் கலை மூலம் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை வளர்த்தெடுத்த கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட பெண்கள் குறித்தும் படிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைப் பொறுத்தவரை முந்தைய ஆண்டுகளின் தேர்வுத்தாள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.''
இவ்வாறு ஆட்சியர் கல்வியின் நிறுவனர் ரத்தினம் தெரிவித்தார்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 13 : சிப்பாய்க் கலகம் முதல் திராவிட இயக்கங்கள் வரை!
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 10: அதிக மதிப்பெண்களை அள்ளித்தரும் அறிஞர்கள் பகுதி..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramanip@abpnetwork.com