’யானைகளின் வீட்டுக்குள் மனிதர்கள் புகுந்து நாசம்’ என்கிறது ரானா டகுபதியின் காடன்..
அசாம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் என்ற இடத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ராணா.
Prabhu Salomon
Rana Daguppati Vishnu Vishal Shriya Pilgaonkar Zoya Hussain
ஈரோஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காடன். காடுகள் மற்றும் அதில் வாழும் விலங்குகளின் முக்கியத்துவத்தை குறித்து சொல்லமுயன்றுள்ள ஒரு திரைப்படம்தான் இந்த காடன். அசாம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் என்ற இடத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ராணா. விஷ்ணு விஷால், ரோபோ சங்கர், ஷரியா, ஜோயா ஹுசைன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்க சாந்தனு மொய்த்ரா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சிறுவயதில் இருந்தே காட்டில் தனது வாழ்க்கையை கழிக்கும் ஒரு நபராக திரையில் தோன்றுகிறார் ராணா டகுபதி. அந்த காட்டினை ராணாவின் பெற்றோர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க அந்த காட்டின் பாதுகாவலனாக வலம் வருகிறார். அமைதியாக வனவிலங்குகளின் சரணாலயமாக விளங்கும் அந்த காட்டில் ஒரு குடியிருப்பு பகுதியைக் கட்ட மும்முரம்கட்டுகிறது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். வளமான காட்டை அழித்து அங்கு குடியிருப்பு கட்டிவிட்டால், அங்குள்ள வனவிலங்குகளின் நிலை மோசமாகும் என்பதற்காக ரியல் எஸ்டேட்டின் திட்டத்தை எதிர்த்து போராடுகிறார் ராணா.
இந்த போராட்டத்தில் இறுதியில் யார் வென்றார்? காட்டினையும் அதில் வாழும் விலங்குகளையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை. அதிக அளவு வனப்பகுதியில் கதைக்களம் நகர்ந்தாலும் சலிப்பில்லாமல் அதை ரசிகர்களுக்கு கொடுத்த ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக் குமாருக்கு ஒரு பலத்த கைதட்டல். வெகுசில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் விஷ்ணு விஷால். ஜோயா ஹுசைன் மற்றும் விஷ்ணு விஷால் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கவைக்கின்றது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் நகர்ந்தாலும் திரைக்கதையில் சுவாரசியம் குறைவுதான். காட்டை நேசிக்கும் மனிதனாக வரும் ராணா பல இடங்களில் அரங்கம் அதிரும் கைதட்டலை பெறுகிறார். அதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. சாந்தனு மொய்த்ராவின் இசையும் ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சபாஷ் சொல்லவைக்கிறது. மொத்தத்தில் காடுகள் மற்றும் அதில் வாழும் வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்த முயன்றிருக்கிறார் காடன்.