Sila Nerangalil Sila Manithargal Review: ஒரு சின்ன வாழ்க்கை பயணம்.. நல்லா இருந்ததா? இல்லையா? - சில நேரங்களில் சில மனிதர்கள் ரிவ்யூ...
தியேட்டரில் கொண்டாடப்பட்டதை விடவும், ஓடிடியில் வெளியாகும்போது இன்னும் நிறைய பேரின் பாராட்டுகளை பெறும் இந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்'
Vishal Venkat
Nasser, Ashok Selvan, Manikandan, Rishikanth, Rythivika, Anju Kurian
1977-ம் ஆண்டுக்குப் பிறகு 2022-ம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது மற்றுமொரு ’சில நேரங்களில் சில மனிதர்கள்’. அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில், நாசர், அஷோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ் ரவிக்குமார், ரித்விகா, அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரேயா என நிறையப்பேர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜயகுமாராக அஷோக் செல்வன், காதலி ரேயாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தந்தை நாசர் திருமண வேலைகளை ஆரம்பிக்க காத்திருக்கிறார். ஈசிஆரில் உள்ள ரெசார்ட் ஒன்றின் ரூம் சர்வீஸ் மேனேஜர் வேலையை செய்து வருகிறார் மணிகண்டன். கொடுத்த வேலையை சரியாக செய்ய முடியாத அவர், பணி வாழ்வில் அடுத்த கட்டம் நகர வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். தமிழ் சினிமாவில் அறிமுக நடிகர் பிரஜீஷாக வரும் அபி ஹாசனுக்கும், ஏற்கனவே சினிமாவில் பல ஹிட்களை கொடுத்த தந்தை ரவிக்குமாருக்கும் பிரச்சனை. நல்ல ஐடி வேலையில் இருக்கும் ஃபேமிலி மேனாக பிரவீன் ராஜா, அவருக்கு செட்டாகதா மனைவியாக, பிஸினஸ் கனவுகளுடன் சாதிக்க நினைக்கும் ரித்விக்கா.
இந்த நான்கு குடும்பங்களையும், அவர்களை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்படி ஒரு எதிர்ப்பாராத விபத்து நடக்கிறது. அந்த விபத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் வெளிப்பாடும் எப்படி இருக்கிறது, அழுகை, கோபம், எதிர்ப்பார்ப்பு, மன்னிப்பு, அறியாமை என ஒவ்வொரு சம்பவத்தின்போதும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தங்களை உணர்ந்து, பிறரை உணர்ந்து வாழ்கையை கடந்து செல்வது எப்படி? இதுதான் சில நேரங்களில் சில மனிதர்களின் கதை.
ஓர் இரவில் நடந்த விபத்தை அடுத்து நடக்கும் சம்பவங்கள் என இரண்டு நாள் கதைதான். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்டிருக்கும் கதைக்களம் என்பதால், வழக்கமான கதையாக இல்லாமல் இப்படம் தனித்து நிற்கிறது. முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரின் சிறப்பான பங்களிப்பும், பார்ப்பவர்களை கதாப்பாத்திரங்களோடு ஒன்றிப்போகச் செய்தது. நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
உணர்ச்சி வசமான இடைவெளி ப்ளாக்கை அடுத்து தொடங்கும் இரண்டாம் பாதியில் பார்ப்பவர்களுக்கு ஒரு சின்ன வாழ்க்கை பயணம் சென்று வந்த அனுபவத்தை தரும். எளிமையான வசனங்களும், சொல்லாடலும் படத்திற்கு ப்ளஸ். சொல்ல வேண்டிய கருத்துகளை தெளிவாக காட்சிப்படுத்தியதில், இயக்குனர் விஷால் வெங்கட் கவனிக்க வைக்கிறார்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் மாறி மாறி வரும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ‘முடிவு’ என ஒன்று கண்டிப்பாக இருக்கும். அதில், சரி எது தவறு எது என்பதை உணர்ந்து வாழ்க்கையில் நகர்தலே பிரச்சனைகளை முடித்து வைக்கும். அழுகை, சிரிப்பு, மன்னிப்பு, கோபம், ஏமாற்றம் என வாழ்வின் ஒவ்வொரு உணர்சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவற்றுள் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவரவர் கையில் என்பதை போதனையாக இல்லாமல் சொல்லி இருக்கிறது இப்படம். எமோஷனலான இரண்டாம் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம். ஆனால், காமெடி, பாடல்கள் என தேவையில்லாததை கட் செய்து கதைக்களத்தில் சமரசம் செய்யாமல் இருந்தது சிறப்பு. ஒரு சில மைனஸ் இருந்தாலும், குறிப்பிட்டு சொல்லும்படியாக இருந்தது படத்தின் பாசிடீவ் விஷயங்களே! எனவே, தியேட்டரில் கொண்டாடப்பட்டதை விடவும், ஓடிடியில் வெளியாகும்போது இன்னும் நிறைய பேரின் பாராட்டுகளை பெறும் இந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்”.