Anjaamai movie Review: நீட் தேர்வு அவலத்தை தோல் உரித்ததா அஞ்சாமை? ரசிகர்கள் மனதை வென்றதா? முழு திரைவிமர்சனம்
நடிகர் விதார்த் நடிப்பில் வெளியாகியுள்ள அஞ்சாமை படத்தின் திரை விமர்சனத்தை கீழே காணலாம்.
சுப்பராமன்
விதார்த், வாணிபோஜன், கிரித்திக் மோகன், ரகுமான், மாரிமுத்து
திரையரங்கம்
தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விதார்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அஞ்சாமை. மருத்துவ கல்வியில் சேர்வதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தியதால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தாக்கத்தையும், அதனால் பறிபோன உயிர் எண்ணிக்கையும் நம்மால் என்றுமே மறக்க முடியாதது ஆகும்.
அஞ்சாமை:
அஞ்சாமை படத்தின் ட்ரெயிலர் வெளியாகும்போதே படம் மருத்துவக்கல்வியையும், நீட் தேர்வையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது ரசிகர்களுக்கு உணர்த்தியது. அதை எவ்வாறு படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்பதை நாம் பார்க்கலாம்.
திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் விவசாயியாக வாழ்பவர் சர்க்கார். பள்ளி படிக்கும்போது மருத்துவராக ஆசைப்படும் அவரது மகன். மத்திய அரசு அப்போது அமல்படுத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு. சாதாரண விவசாயியான சர்க்கார் தனது மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்ற எவ்வாறு எல்லாம் போராடுகிறார்? மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு அவர்களை எந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்களை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர்? அவர்களுக்கு சமூக பொறுப்புள்ள ரகுமான் எவ்வாறு உதவுகிறார்? என்பதே படத்தின் கதை.
மிரட்டிய விதார்த்:
ஒரு சாதாரண கிராமத்து தந்தையாக விதார்த் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளின் வளர, வளர அவர்களின் ஆசைகளுக்காக தங்களை ஓடாய் தேய்த்து வருத்தி உழைக்கும் ஒவ்வொரு தந்தையையும் அப்படியே கண் முன் நிறுத்துகிறார் விதார்த். அவரது நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாத நடிப்பை தந்திருக்கிறார் வாணி போஜன். மனைவியாக, தாயாக கிராமத்து பெண்ணாக மிரட்டலான நடிப்பை தந்துள்ளார் வாணி போஜன். மகனாக நடித்துள்ள கிரித்திக் மோகன் நடிப்பும் அபாரம்.
நம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக பட்ட இன்னல்களையும், இந்த நீட் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர் மையங்கள் எப்படி பணம் சம்பாதித்தனர் என்பதை அப்படியே பட்டவர்த்தமாக, அதேசமயம் மிகவும் யதார்த்தமாக தோலுரித்து காட்டும் விதமாக முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கியுள்ளார்.
முதல் பாதி அபாரம்:
படத்தின் மிகப்பெரிய பலமே முதல் பாதியில் தனது மகனுக்காக விதார்த் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளின் காலில் விழும் காட்சிதான். அந்த காட்சி ரசிகர்கள் ஒவ்வொருவரின் கண்களையும் குளம்போல் ஆக்குவதுடன் நம் நெஞ்சை உலுக்குகிறது. அந்த காட்சியை பார்க்கும்போது இவ்வாறுதானே நமது மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் நீட் தேர்வின் போது சிரமத்தை அனுபவித்திருப்பார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
படத்தின் இடைவேளை காட்சி எதிர்பாராதது. ஆனால், உண்மையில் நடந்த சம்பவம்.
படத்தின் இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் ரகுமான் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும், இந்த மக்கள் நமது அரசாங்கத்தின் முன்வைக்கும் நியாயமான கேள்விகளாகவே உள்ளது. அதற்கு அதிகாரிகள் சொல்லும் பதில் யதார்த்த்தில் அந்த இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு வலியை உணர்த்தும்.
பலவீனம்:
படத்தின் பெரும் பலமாக உணர்வுப்பூர்வமாக முதல் பாதியை கொண்டு சென்ற இயக்குனர் இரண்டாம் பாதியை நீதிமன்ற காட்சிக்குள்ளே சுருக்கிவிட்டது படத்திற்கு பலவீனமாக அமைகிறது. ஆனாலும், அந்த காட்சிகளில் ரகுமான் கேட்கும் கேள்விகள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வண்ணமாகவே உள்ளது. காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரகுமான், பள்ளி சிறுவனுக்காக தனது பதவியை உதறிவிட்டு வருவது யதார்த்த மீறலாக இருக்கிறது. ஆனாலும், ஒரு சமூக பொறுப்புள்ள நபராக இதை பார்க்கும்போது அது படத்திற்கு பெரிய மைனசாக தென்படவில்லை.
படத்தின் இறுதிக்காட்சி இன்றும் தமிழகம் நீட் தேர்வுடன் எவ்வாறு போராடுகிறது? என்பதை அப்படியே காட்டியுள்ளது. சமூக பொறுப்புள்ள கதைகளை படமாக்கும் இயக்குனர்களை எப்போதும் பாராட்ட வேண்டும். அந்த வகையில் என்றுமே மக்கள் மறக்க முடியாத சமூக அவலத்தை படமாக இயக்கிய இயக்குனர் சுப்புராமனை மனதார பாராட்ட வேண்டும்.
கண் முன் வரும் யதார்த்தம்:
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு தந்தையாக விதார்த் நடித்த நடிப்பானது 90களில் பிறந்து வளர்ந்த கிராமத்து மாணவர்களின் தந்தையை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. ஏனென்றால், 90-ஸில் பிறந்து வளர்ந்தவர்களின் தந்தைகளில் பெரும்பாலோனார் கூலித் தொழிலாளிகளாகவும், விவசாயிகளாகவும் இருந்தவர்கள். தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க அவர்கள் பட்ட இன்னல்களும், மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புக்கு நிலங்களையும், மாடுகளையும் விற்றதையும் கண் முன்னே காட்டிய இயக்குனருக்கும், அதை உயிரோட்டமாக்கிய விதார்த்திற்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டலாம்.
சமூக பொறுப்புள்ள அஞ்சாமை படம் நீட் தேர்வுக்கும், அதன் அவலங்களுக்கும் ஒரு சாட்டையடி. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் – திருச்சித்திரம் தயாரித்துள்ளனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமசுதர்சன் எடிட்டிங் செய்துள்ளார்.