படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் 500 காலிப்பணியிடங்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்களில் வேலை தேடும் தகுதியான இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக ஒருசிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதால், வேலை தேடும் பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் இந்த நல்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுள்ளார்கள்.
முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதி விவரங்கள்
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது எதிர்வரும் 23 -ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கச்சேரி ரோடு, மயிலாடுதுறையில் அமைந்துள்ள செந்தில் பைப்ஸ் நிறுவனத்தின் அலுவலக வளாகத்தில் இந்த முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது.
புகழ்பெற்ற டாரோ பம்ஸ் மற்றும் பைப்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட செந்தில் ஏஜென்சீஸ் நிறுவனத்திற்காக இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் செந்தில் பைப்ஸ் நிறுவனத்திலுள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட தகுதியான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி மற்றும் பங்கேற்கும் முறை
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பி.இ போன்ற தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் கூட இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது தகுதிக்குேற்ற பணிகளை பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து தனியார்துறை நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்கள்
வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு இலவச வழிகாட்டுதல்களும் இம்முகாமில் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக வெற்றி நிச்சயம் திட்டம் வாயிலாக இளைஞர்களுக்குத் தேவையான திறன் பயிற்சி வழங்கப்படுவதுடன், சுயதொழில் தொடங்க விரும்பும் ஆர்வலர்களுக்கு வங்கிக்கடன் பெறுவதற்கான வசதிகள் பற்றியும் விளக்கப்படும். மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கான ஆலோசனைகளும், அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களும் இந்த முகாமில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவையான ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள்
வேலைநாடுநர்கள் முகாமிற்கு வரும்போது தங்கள் சுய விவர அறிக்கை எனப்படும் பயோடேட்டா, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், முன் அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுக்கான நகல்களுடன் நேரில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் 04364299790 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























