மாதம் நெருங்க நெருங்க குழந்தையின் அசைவுகள் வெளியே தெரியத் தொடங்கும். உங்கள் குரலையும் அரவணைப்பையும் உள்ளிருக்கும் குட்டிஉயிர் கவனித்துக் கொண்டிருக்கும். அந்தக் குட்டிஉயிரோடு நாள்தோறும் உரையாடுங்கள். 


•கோடு போடலாம் வாங்க!
எட்டாம் மாத இறுதியிலிருந்தே நாள் ஒன்றுக்கு பத்து அசைவுகள் குழந்தைக்கு இருக்கிறதா என்பதை நமது மருத்துவர் கணக்கு வைத்துக்கொள்ளச் சொல்லியிருப்பார். கயிறு ஒன்றில் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொருமுறை முடிச்சு போடுவது, செல்போனில் பதிவு செய்வது, மனக்கணக்காக வைப்பது என வெவ்வேறு முறைகளைப் பின்பற்றுவது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. இடுப்புவலியும் கால்வலியும் படுத்தத்தொடங்கியிருக்கும் இந்த நாட்களில் நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்வதே பெரிய விஷயம்தான். ஒரு முயற்சியாக, குழந்தையின் அசைவுகளைக் கணக்குவைப்பதை சுவாரஸ்யமாகச் செய்யலாமே என யோசித்து மாதாந்திர நாட்காட்டியில் கோடு போடத் தொடங்கினேன். ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கோடு. 


நான்கு கோடுகள் போட்டதும் ஐந்தாவது கோட்டை நான்கு கோடுகளையும் குறுக்கே அடித்து ஐந்து எனக் கணக்குவைக்கும் tally marks முறையில் செய்தேன். தினமும் பத்து கோடுகள் நிறைவடைவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். நாளடைவில் குடும்ப உறுப்பினர்களையும் இந்தக் கோடுபோடும் பணியில் ஈடுபடுத்த, வீட்டில் தினமும் திருவிழாதான். அப்பா வந்து நாற்காலியில் அமரும்போது "அப்பா, அப்பா, அப்படியே ஒரு கோடு போட்டுட்டு உட்காருங்க" என்பதும் "எட்டு கோடு வந்துடுச்சு", " ஒன்பது ஆயிடுச்சு, இன்னும் ஒதைக்குதா?!" என வீட்டார் கேட்பதும் என உற்சாக உரையாடல்கள்தான். குழந்தையை எல்லாருமாய் சேர்ந்து வரவேற்கும் ஆயத்த மனநிலைக்கு இந்தக் கோடுகள் இட்டுச்சென்றன. நாட்கள் நெருங்க நெருங்க குழந்தையின் அசைவை வீட்டிலிருப்போரும் கவனிக்கவும் நினைவுபடுத்தவும் இந்த வெளிப்படைத்தன்மை உதவியது. நம் செல்போனிலேயே எல்லா விவரங்களையும் வைத்துக் கொள்ளாமல்,  இப்படி வீட்டுநபர்களுக்கும் தெரியும்படி  செய்வதால், பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை செல்லும்போது மருத்துவரிடம் குழந்தையின் சமீபத்திய அசைவு பற்றி உறுதியாகக் கூற முடியும்.




அந்த நபர் யார்?!
பேறுகாலத்தில் மருத்துவமனையில் நம்மோடு இரவு தங்கப்போகும் அந்த ஒரு நபர் யாரென முன்கூட்டியே தெரிவுசெய்யுங்கள். மருத்துவர் சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடிய, மிகைப்படுத்தாத, பதட்டப்படாத, சுறுசுறுப்பான,தெளிவான நபரை உடன்வைத்துக்கொள்வது நல்லது. நம் முகக்குறிப்பு அறிந்து செயல்படும் நபராக இருந்தால் இன்னும் சிறப்பு. இரவு அயர்ந்து உறங்காமல் கொஞ்சம் சத்தம் கேட்டதும் விழிப்பவராக இருந்தால் தாய்க்கும் சேய்க்கும் வசதி. 


•உடனே அழைக்க!
உங்கள் PICME எண் , ஆதார் எண், பரிசோதனை அறிக்கைகள் போன்றவற்றைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள். நீங்கள் என்ன ரத்த வகை என்பதையும் இணையருக்குச் சொல்லிவையுங்கள். இதில் நான் எவ்வளவு முன்னெச்சரிக்கை என்றால், பேறுகாலத்தில் ஏதும் கூடுதல் ரத்தம் தேவைப்பட்டால் பயன்படட்டும் என ரத்தம் கொடுக்க நண்பர்களையும் ஏற்பாடுசெய்து வைத்திருந்தேன். பெருநகரங்களில் இருப்போர் கால் டேக்ஸிக்களை மட்டுமே நம்பிஇருக்காமல் கூடுதலாக வீட்டருகே இருக்கிற ஆட்டோ, கார்  எண்களை வாங்கிவைத்துக் கொள்வதுடன் அவர்களிடம் முன்கூட்டியே எந்த எண்ணிலிருந்து அழைப்பீர்கள் என்பதையும் சொல்லிவைப்பது நல்லது. இரவுநேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு விரைந்துசெல்ல இந்த ஏற்பாடுகள் உதவும். ஆவலோடு காத்திருங்கள். அடுத்த பகிர்வில் தொடர்வோம். 


முந்தைய தொடர்களை படிக்க...


அன்பும் அறனும் - 1 : குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் இதை படிங்க


அன்பும் அறனும் - 2 : குழந்தை உருவாகிடுச்சா? இதில் கவனம் செலுத்துங்கள்


அன்பும், அறனும் 3: இது அன்னையின் காலம்.. கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!


அன்பும் அறனும் -5: அழகான கர்ப்பகாலம்.. 5 மாதங்களுக்கு பிறகான கவனமும்! தேவையும்!


அன்பும் அறனும் - 6: அழகான கர்ப்பகாலம்.. 7வது மாதமும்.. தேவை கவனமும்!


அன்பும் அறனும் 7: கர்ப்ப காலத்தில் என்னவிதமான ஆடைகளை அணிய வேண்டும்?


அன்பும் அறனும் 8: பண்டிகை ஷாப்பிங் ப்ளான் பண்ணுங்க.. தாயின் பையில் ரெடியாக இருக்கவேண்டியது இவைதான்..


அன்பும் அறனும் 9 | உங்கள் செல்ல குழந்தையை பூமிக்கு வரவேற்கத் தயாராகுங்கள்.. வெல்கம் பொருட்கள் இதோ..