முதல் லப்-டப்


கருவில் இருக்கிற குழந்தையின் இதயத்துடிப்பை முதல்முறை கேட்கிற அந்தப் பரவசம் எப்போதும் மறக்கமுடியாதது. அதுவரை நேரத்துக்கு சாப்பிடுவதில் பெரிய கவனத்தோடு இருந்திருக்க மாட்டோம். இனி அப்படி இல்லை. நாம் இன்னொரு குட்டிஉயிருக்காகவும் சேர்த்து சாப்பிடவேண்டி இருக்கும். டீ காபி போன்றவற்றைக் குறைத்து பழக்கலவை, பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதை தொடக்கத்திலிருந்தே பழக்கப்படுத்திக் கொண்டால், தாயின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையாமல் இருக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.


கப கப பசி!


சிலநேரங்களில் அதிகமாகப் பசிக்கும். எவ்வளவு அதிகமாக என்றால்... பின்னிரவு மூன்று மணிக்குக்கூட எனக்குப் பசித்திருக்கிறது. பசிதாங்க முடியாமல் அந்நேரத்தில் பல்துலக்கி பழங்கள் பிரட் என கண்ணில் கண்டவற்றையெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். வெளியே செல்லும்போது 'பசிக்குது' என்பதைச் சொல்லக்கூடத் தயக்கமாக இருக்கும். அதனால் வெளியே கிளம்பும்போது கைப்பையில் ஏதாவது பழமோ, தின்பண்டமோ வைத்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


கையோடு இருக்கட்டும் கையடக்க குடிநீர்ப் புட்டி!


அப்போதுதான் 'அப்பாடா' என அமர்ந்திருப்போம். அந்தநேரம் தான் தண்ணீருக்காக தொண்டை கெஞ்சும். தாகமாக இருந்தாலும் எழுந்துசென்று தண்ணீர் குடிக்க அலுப்பாக இருக்கும். அதனால் அரைலிட்டர் அளவுள்ள தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளுங்கள். கையடக்க பாட்டிலாக இருப்பதால் நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றும். மேலும்  வெளியே செல்லும்போதும் வெவ்வேறு இடங்களில் தண்ணீர் குடிக்கிற சூழல் ஏற்படலாம். மருத்துவமனையில் ஸ்கேனுக்கு செல்லும்போது கடைகளில் கிடைக்கிற தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொள்வதைவிட வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுங்கள். ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கிறோமா என்பதை உறுதிசெய்ய பாட்டில் பழக்கம் உதவும்.


முதுகுவலியின்றி உறங்க...


கருவுற்ற மூன்று மாதங்களிலிருந்தே லேசான முதுகுவலி ஏற்படலாம். வயிறு குறித்த கவனமும் நமக்கு அதிகமாக இருக்கும். படுக்கையிலிருந்து சட்டென முன்புபோல் எழுந்திருக்காமல் ஒருபுறமாய் திரும்பிப் படுத்து எழச்சொல்லி மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். பல நேரங்களில் நாம் அவ்வாறு எழுவதற்கு மறந்துவிடுவோம். முதுகுக்கு வசதியாய் ஒரு தலையணையை வைத்துத்தூங்கலாம். முடியுமெனில் இதற்கென பிரத்யேகமாகக் கிடைக்கிற pregnancy bed pillow ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். எனது இரண்டாம் மாதம் தொடங்கி பேறுகாலம் வரை இந்தப் படுக்கையைப் பயன்படுத்தியது இலகுவாகவும் இதமாகவும் இருந்தது. பிள்ளை பிறந்த பிறகும் பிள்ளையைப் படுக்கவைத்து சுற்றிலும் தலையணை வைப்பதற்கு மாற்றாக இதனையே பயன்படுத்தலாம்.




மறக்கக் கூடாத மாத்திரைகள்


மாத்திரைகளை எடுக்க வசதியாய் ஒரு சிறிய பெட்டியில் பத்து நாட்களுக்கானதை மட்டும் தனியே எடுத்துவைத்துக் கொள்ளலாம். நிறைய மாத்திரைகள் சாப்பிட வேண்டுமென்கிற எண்ணத்திலிருந்து விடுபட இது உதவும்.  வீட்டிலிருப்போரிடமும் எந்த வேலைக்கு எந்த மாத்திரை என்று சொல்லிவைப்பது நல்லது.


காலண்டர் அலர்ட்


மாதாந்திர பரிசோதனைக்குச் செல்லவேண்டிய தேதியை காலண்டரில் குறித்துவைத்து விடுங்கள். தேதி மறவாமல் பரிசோதனைக்குச் செல்வது அவசியம்.


பகலில் குட்டித்தூக்கம்


உடலுக்கு சிறிது ஓய்வு கொடுத்து பகலில் குட்டித்தூக்கம் தூங்க முடிந்தால் தூங்கலாம். இந்தப் பகல்தூக்கம் உறக்கம் தொலைத்த இரவுநேரத்தை ஈடுகட்டும்.


கலையும் கைவண்ணமும்


பிடித்தமான ரசனையான ஏதாவது ஒரு கலையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். தோட்டம் போடுங்கள். இடவசதி இல்லாதோர் ஒரு தொட்டியில் மணிபிளாண்டோ டேபிள்ரோஜாச்செடியோகூட வைத்து பராமரியுங்கள். நாம் வைக்கிற செடியிலிருந்து துளிர்க்கிற துளிரும் அரும்பும் மலரும் மனதுக்கு நிறைய மகிழ்ச்சி தரும். அவற்றைக் கொண்டாடுங்கள். கர்ப்ப காலம் பசுமையாய் அமையட்டும்.