வேலையும் வயிறும்
வளையலணி விழா முடிந்த கையோடு நான் செய்த முதல் வேலை மருத்துவமனைக்கான பைகளைத் தயார் செய்ததுதான். ஏழாம் மாதத்திலேயே வளையலணிவிழா நடைபெற்று பேறுகாலத்துக்கு முழுதாக மூன்றுமாதங்கள் இருந்தன. அதனால் நிதானமாக எடுத்துவைக்க நேரமிருந்தது.
"பாவம்! வேலை செஞ்சா மூச்சுவாங்கும்; நிறைய வேலை செய்யாத" என்ற குரல்களே அதிகம் ஒலித்தன. கருவுற்றிருக்கிற ஒரே காரணத்திற்காக உட்கார்ந்த இடத்திற்கு சாப்பாடும் ஜூஸும் கேட்பது நமக்கு ஒத்துவராத ஒன்று. முடிந்தவரை என் வேலைகளை நானே செய்யவேண்டும் என்பதில் தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருந்தேன். அதனால் கனமான பொருள்கள் தூக்கவதைத் தவிர்த்து மற்ற வேலைகள் அனைத்தையும் இயன்றவரை நானே செய்தேன். மருத்துவர் ஓய்வெடுக்கச் சொன்னாலன்றி 'ச்சும்மா' ஓய்வுகளைத் தவிர்க்கலாம்.
முதல் அசைவு!
குழந்தையின் முதல் அசைவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுகமே தனிதான். எந்த நொடி அந்த அற்புதம் நிகழுமோ என எண்ணியபடி என்ன வேலை செய்தாலும் மனம் முழுக்க வயிற்றிலேயே ஒன்றியிருக்கும் நாட்களவை. குட்டிஉயிரின் முதல் அசைவை முதலில் தாய் மட்டுமே உணரமுடியும் என்பது சற்று வருத்தமே. நாம் மட்டும் கொண்டாடும் அந்தத் தருணத்தை நம் முகக்குறிப்பை உணரமுடியாமல் குழந்தையின் தந்தை படும் அவஸ்தையும் அழகே. காற்றுக் குமிழிகள்போல் வயிற்றுக்குள் லேசாக ஒரு உணர்வு தோன்றும். பசியால் வயிற்றுக்குள்ளிருந்து கர்ர்ர்ர் என்று சிலநேரம் கேட்குமே அதைவிடவும் மெல்லிய அசைவாக இருந்தது. நான் உணர்ந்தது கனவா கற்பனையா நிஜமா என்று நிதானிப்பதற்குள் அடுத்தடுத்து மீண்டும் இரண்டுமுறை அதேபோன்ற அசைவு. துள்ளிக்குதிக்க வேண்டும்போல இருந்தது. வாலையெல்லாம் சுருட்டி வைத்திருக்க வேண்டியுள்ளதால் கொஞ்சமாக குதூகலித்துக் கொண்டேன். அந்த உணர்வைத் தவறாமல் அனுபவியுங்கள்.
அம்மாவின் பை!
மருத்துவமனை நாட்களுக்கென நமக்கான பையைத் தயார் செய்யலாம். கஞ்சிபோடாத பழைய காட்டன் புடவைகள் நான்கு எடுத்துவையுங்கள். கூடவே கத்தரிக்கோலும் இருக்கட்டும்.
நைட்டிகள் வாங்கும்போது 'நர்சிங் நைட்டி' கிடைக்கின்றன. அடர்நிறமாக வாங்குங்கள். உங்கள் பழைய அளவில் வாங்கலாம். பிரசவத்திற்கு பிறகு வயிறு குறைந்துவிடுவதால் முந்தைய அளவே ஓரளவு சரியாக இருக்கும். பட்டன் நைட்டிகளை விடவும் நீண்ட ஜிப் உடைய நைட்டிகளே பயன்பாட்டளவில் சிறந்தது.
'நர்சிங் பிரேசியர்' B மற்றும் C என்ற இருவேறு கப் அளவுகளில் கிடைக்கின்றன. தோள்பட்டையின் மேற்புறம் க்ளிப் இருக்கிற வகையே பாலூட்ட வசதியாக இருக்கும். வெளிர் நிறங்களில் வாங்கினால் நலம்.
'நர்சிங் மேக்ஸி' எனப்படுகிற கவுன் மாதிரியான உடைகள் ரொம்பவே வசதியாக இருக்கும். அதிலும் கால்வரை கச்சிதமாக இருக்கும் உடைகள் வாங்கினால் பேண்ட் அணியாமல் மருத்துவமனை செல்ல எளிது. ஒன்பதாம் மாதத்திலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரையிலுமே இந்த ஆடைகளையே வெளியே செல்லும்போது உடுத்தலாம்.
உடலை உறுத்தாத மஸ்லின், லினென் வகையிலான துணிகளில் உடைகள் இருக்கட்டும். பலவண்ணங்கள் கலந்த டிசைன்களில் இருந்தால் எவ்வித கறை பட்டாலும் தெரியாது. நர்சிங் ஜிப் பக்கவாட்டில் இருக்கிற உடைகளே குழந்தைக்கு உறுத்தாமல் இருக்கும். கிடைமட்டமாக உள்ளவை பயன்படுத்த இலகுவாக இல்லை. கழுத்துப் பகுதியில் ஃப்ரில் வைத்த உடைகளெனில் பார்க்கவும் இயல்பாக இருக்கும். இன்னும் பகிர நிறைய இருக்கு. அடுத்த பகிர்வில் தொடருவோம்
முந்தைய தொடர்களை படிக்க...
அன்பும் அறனும் - 1 : குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் இதை படிங்க
அன்பும் அறனும் - 2 : குழந்தை உருவாகிடுச்சா? இதில் கவனம் செலுத்துங்கள்
அன்பும், அறனும் 3: இது அன்னையின் காலம்.. கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!
அன்பும் அறனும் -5: அழகான கர்ப்பகாலம்.. 5 மாதங்களுக்கு பிறகான கவனமும்! தேவையும்!
அன்பும் அறனும் - 6: அழகான கர்ப்பகாலம்.. 7வது மாதமும்.. தேவை கவனமும்!