"அன்பும் அறமும் உடைத்தாயின்" என மணப் பத்திரிகையில் அச்சிடுவதிலிருந்து ஆசை ஆசையாய்த் தொடங்குகிறது இல்லற பந்தம். பெரும்பாலானோரின் வாழ்வில் பொறுப்பும் மகிழ்வும் இரட்டிப்பாகும் நாட்களும் முப்பதுகளுக்குப் பிறகான இந்த நாட்கள்தான். இணையேற்பு முடிந்த ஓரிரு மாதங்களிலேயே பலரும் கேட்கும் கேள்வி, "ஏதும் விசேஷமா?"  என்பதுதான். மணமான இருவருக்கும் இடையேயான மனப்புரிதல் நிகழும் முன்னரேகூட, மூன்றாம் நபராக ஒரு குழந்தையை எதிர்பார்க்க நம்மைச் சுற்றியிருப்போர் தவறுவதில்லை.


ஓரிரு மாதங்களுக்கு முன்புவரை 'லிட்டில் பிரின்சஸ்'ஸாக இருந்த நமக்கு, 'அதற்குள் ஒரு குழந்தையா என்கிற குழப்பம் ஒருபுறமும்', 'ஒரு குழந்தையை நம்மால் சமாளிக்க முடியுமா?' என்கிற அச்சம் மறுபுறமும் குடைந்தெடுக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டாலும் கூட எதை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் எல்லாத் தேவைகளுக்கும் கூகுளாண்டவரைத் தேடுகிறோம். மேற்சொன்ன சிந்தனையும் தேடலும்கொண்டு தேடிக்கண்டவற்றை அனுபவப்பகிர்வாக இத்தொடரின்வழி பேசவிருக்கிறோம்.




ஒரு குட்டி உயிரை எதிர்பார்க்கிற நாம், முதலில் அதற்கு ஆயத்தமாக இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். யோசிக்காமல் நமது கடைசி பீரியட்ஸ் தேதியை சொல்ல பலருக்கும் தெரிவதில்லை. சில வருடங்களுக்கு முன்புவரை என் பீரியட்ஸ் தேதியைக் கேட்டால் "அம்மாவிடம்தான் கேட்கவேண்டும்" என்று சொல்லியிருக்கிறேன்.


குழந்தைத் திட்டமிடலில் முக்கியமானது LMD (Last Menstrual Date) அதாவது கடைசி மாதவிடாய் நாள். எங்கேயாவது தேதியைக் குறித்துவைத்துவிட்டு தேடிக்கொண்டிருப்போம். அதற்கு மாற்றாக கையிலிருக்கிற ஸ்மார்ட் ஃபோனையே பயன்படுத்தலாம். மாதவிடாய் சுழற்சி நாட்களைப் பதிந்து வைத்துக்கொள்வதற்கென்று பிரத்யேக செயலிகள் பல உள்ளன.


Periods tracker, my calendar அவற்றில் ஏதாவது ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கடைசி மாதவிடாய் நாள், தோராயமாக ஒரு சுழற்சியின் உதிரப்போக்கு நாட்களுடைய எண்ணிக்கை போன்றவற்றைப் பதிவு செய்துகொள்ளலாம். நாம் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாதத்தில் கருமுட்டை தயாராக இருக்கிற நாட்களைத் தோராயமாக அறிந்துகொள்ளலாம். அடுத்த மாதசுழற்சி தேதியினையும் அந்தச் செயலியே நமக்கு நினைவூட்டும். இதன்மூலம், எல்.எம்.டி எனப்படுகிற கடைசி மாதவிடாய்த் தேதியை, மருத்துவர் கேட்கும்போது குழப்பமின்றிச் சொல்லலாம். தேதி தள்ளிப்போவதையும் செயலியே காட்டிவிடும




முப்பது முதல் முப்பத்து ஐந்து நாட்கள் இடைவெளிவரை மாதவிடாய் ஏற்படவில்லையெனில், மருந்தகங்களில் கிடைக்கிற Pregnancy test kit ஐ வாங்கி, வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ளலாம். காலையில் எடுக்கிற முதல் சேம்பிளின் துல்லியத்தன்மை அதிகம். அதனால் டெஸ்ட் செய்வதற்கு முந்தையநாளே kit வாங்கிவைத்துக் கொள்வது சிறந்தது. 


ஒன்றுக்கு இரண்டு வெவ்வேறு பிராண்ட் வாங்கி, பரிசோதனை செய்வது நலம். பரிசோதனையில் இரண்டு பிங்க் நிறக் கோடுகள் வந்துவிட்டால், அடுத்த ஒரு வாரத்தில் மருத்துவமனை சென்றுவிடலாம். இதில் தாமதமோ, அலட்சியமோ, மூடநம்பிக்கையோ வேண்டாம். மருத்துவர் பரிசோதித்து உறுதிப்படுத்தும்வரை சுற்றத்தாருக்குச் சொல்வதைத் தவிர்க்கலாம். அந்த இரண்டாம்கோடு குட்டிப்பூவாய்ப் பூக்க வாழ்த்துகள்!