அனுபவ் சின்ஹா இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஆர்டிகிள் 15’ இந்த படத்தை பிரபல ஜீ நிறுவனம் தயாரித்திருந்தது. தென்னிந்திய ரீமேக் வெளியீட்டு உரிமையை போனி கபூர் கைப்பறினார். தற்போது அருண் ராஜா காமராஜ் தயாரிப்பில் , நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் போனி கபூர் படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போனி கபூர் திடீரென சந்தித்துள்ளனர்.இது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்ட பக்கத்தில் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின் “எனது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் நிர்வாக தயாரிப்பாளர் ராகுல் இருவரும் இன்று என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நெஞ்சுக்கு நீதி படம் குறித்து அதிகம் பேசப்பட்டதாக தெரிகிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில்தற்போது நடைபெற்று வருகிறது. அண்ணல் அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தில் முக்கியமானது‘சட்டப்பிரிவு 15’. இப்பிரிவானது, ‘சாதி, மதம், இனம், நிறம், பிறப்பிடம், பால் ஆகியவற்றைக் கொண்டு ஒருவர்மீது ஒருவர் பாகுபாடு காட்டக் கூடாது. குறிப்பாக மக்களுக்கான அரசு இத்தகைய வேறுபாடுகளின் அடிப்படையில் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது’ என்று கூறுகிறது. ஆனால் இந்த விதிகளை கொஞ்சமும் மதிக்காமல், அரசும் அதிகார வர்க்கமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது தான் ஆர்டிக்கிள் 15 திரைப்படம்.
'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு பெயரிடப்படாமல் இருந்த நிலையில் இன்று இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார் போனி கபூர். இதில் ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு நெஞ்சுக்கு நீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி என்பது நாயகன் உதயநிதியின் தாத்தாவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பல கட்டங்களாக எழுதிய நூல் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த நூல்தான் திமுகவினரின் மகாபாரதம். இந்த பெயரை தான் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். இப்படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்த அயன் ரஞ்சன் வேடத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஜாதி ஜாதி ஜாதி யாரு தந்த ஜாதி.. நீதி நீதி நீதி நீயும் நானும் நீதி.. ஜாதி ஜாதி ஜாதி சூறையாடும் ஜாதி.. நீதி நீதி நீதி தீர்வு தரும் நீதி.. என்ற பின்னணிக்குரலில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முடிவில் நெஞ்சுக்கு நீதி, பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று முடிகிறது அந்த மோஷன் போஸ்டர்.. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாசகமே கருணாநிதி தீவிரமாக பின்பற்றிய கோட்பாடாகும்.