•நாளும் வளரும் வயிறே!


இரண்டாம் காலாண்டின் பிற்பகுதியில் பெருத்த வயிறோடு உறங்கவும் குனியவும் நிமிரவும் பழகியிருப்பீர்கள். முந்தைய மாதம் பயன்படுத்திய டாப்ஸ் கூட இந்த மாதம் சின்னதாகிவிட்டது போன்ற உணர்வு தோன்றும். எனக்கு முதல்வாரம் சரியாக இருந்த டாப்ஸ் அடுத்தவாரமே கொள்ளவில்லை. அதனால் இனிவரும் மூன்று மாதங்களுக்கும் பயன்படுத்த அம்பிரல்லா டைப் வகையிலான லாங் டாப்ஸ் அல்லது கவுன் மாதிரியான உடைகளைப் பயன்படுத்தலாம். வயிறும் வெளித்தெரியாது. உடுத்தவும் இலகுவாக இருக்கும். வேலைக்கு செல்லும்போது பகல் முழுதும் அமர்ந்து வேலை செய்ய சிரமமில்லாமல் இருக்கும். 


•வண்ண வண்ண வளையல்கள்!


ஏழாம் மாதத்திலோ ஒன்பதாம் மாதத்திலோ வளையலணி விழா நடத்துவார்கள். இதற்கான வளையல் தேர்வில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். வழக்கமான முகூர்த்த வளையல்கள் எனில் கவலையில்லை. ஃபேன்ஸி வளையல்களை வளையலணி விழாக்களுக்குப் பயன்படுத்துவது தற்போது பிரபலமாகி உள்ளது. ஃபேன்ஸி வளையல்கள் வாங்குவதென்றால் முன்கூட்டியே ஒரு டஜன் வளையல் வாங்கி விழாவுக்கு ஓரிரு வாரம் முன்பே கைகளில் போட்டு ஒவ்வாமை ஏதும் ஏற்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். சில வளையல்கள் தண்ணீரில் படும்போது மேற்புற பளபளப்பு உரிந்து கைகளில் அரிப்பை ஏற்படுத்தும். சிலநேரம் தோல்தடிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனால் கூடுதல் கவனம் இருக்கட்டும். வளையலும் வழக்கமான அளவைவிட கால் இஞ்ச் பெரிய அளவில் இருந்தால் பின்னாட்களில் கைகள் வீங்கினாலும் வளையல் கைகளை இறுக்காமல் இருக்கும். 




•வாராயோ உறக்கமே!


மாதங்கள் கூடக்கூட இரவுநேரத்தில் உறக்கம் வர சிரமமாக இருக்கும். பகலில் உறக்கம் வந்தால் நன்றாக உறங்குங்கள். இரவில் உறக்கம் வராத சூழலில் டி.வி பார்ப்பதையும் அறையில் மின்விளக்குகள் எரிவதையும் தவிர்க்கப் பாருங்கள். மெல்லிய இசை கேளுங்கள். குறைந்த மெல்லிய வெளிச்சம் உறக்கத்துக்கு உதவும். இரவு உறங்கும் முன் பத்து முதல் இருபது நிமிடங்கள் நடந்துவிட்டு வருவதும் உறக்கத்துக்கு வழிவகுக்கும். இரவு உணவை கொஞ்சம் முன்கூட்டியே உட்கொள்வது, வெந்நீர் குடிப்பது போன்றவை உணவு செரித்தலை எளிதாக்கும். இந்தச் சின்னச்சின்ன மாற்றங்களே உறக்கத்தை அழைத்துவரும். 


•நிற்க வேண்டாம்; உட்காரலாமே!


அதுவரை பெரும்பாலும் அவசர அவசரமாக நின்றபடி குளித்திருப்போம். இனி கொஞ்சம் அகலமான எடை தாங்கும்படியான வழுக்காத முக்காலி அல்லது சிறிய ஸ்டூல் ஒன்றை குளிக்கும்போது பயன்படுத்துங்கள். அவ்வப்போது லேசான மயக்கம் வந்தாலும் அமர்ந்துகொண்டே குளிப்பது பாதுகாப்பானது. குனிந்து கால்விரல்களைத் தேய்க்காமல் முக்காலிக்குப் பக்கவாட்டில் கால்களை வைத்து விரல்களைத் தேய்க்க முடியும். முடிந்தவரை பிடிமானம் இல்லாமல் 'படக்', 'படக்' என எழுவதைக் குறைத்து குளியலறையின் குழாயையோ, கம்பியையோ பிடித்தபடி எழுந்து பழகுவது நல்லது. கவனக் குறைவால் வழுக்கினாலும் பிடிமானம் இருப்பது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.




•கால்களே! கால்களே! 


குழந்தை வளர வளர அதன் எடைகூடுதலால் கெண்டைக்கால்களில் வலி ஏற்படும். அதனால் இரவு படுக்கும்முன் ஏதாவது மிதமான எண்ணெயைத் தடவி வெந்நீரை ஊற்றிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஃபிரஞ்ச் ஆயில், உளுந்து தைலம் போன்றவை எனக்கு நல்ல வலிநிவாரணியாக இருந்தன. அதேபோல் Hotwater bag பயன்படுத்தியும் கால்களில் ஒத்தடம் 
கொடுத்துக்கொண்டேன். சில நேரம் கால்கள் வீங்கும்போது சிறதளவு கல்உப்பு போட்டு வெந்நீரில் கரைத்து அதில் கால்களை வைக்கும்போது வீக்கம் குறைந்தது. மெட்டி அணியும் பழக்கமிருப்பவர் எனில், கால்வீக்கத்தின்போது மெட்டியின் நெருக்கத்தைத் தளர்த்த மறக்கவேண்டாம். சின்ன தளர்வே பெரிய மகிழ்வைத் தருமல்லவா?! 


- தொடர்ந்து பேசுவோம்...


 


முந்தைய தொடர்களை படிக்க...


அன்பும் அறனும் - 1 : குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியர் இதை படிங்க


அன்பும் அறனும் - 2 : குழந்தை உருவாகிடுச்சா? இதில் கவனம் செலுத்துங்கள்


அன்பும், அறனும் 3: இது அன்னையின் காலம்.. கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


அன்பும் அறனும் -4: குட்டித் தொப்பையாய் கர்ப்பகாலம்.. அழகான இரண்டாம் காலாண்டு பருவம்!


அன்பும் அறனும் -5: அழகான கர்ப்பகாலம்.. 5 மாதங்களுக்கு பிறகான கவனமும்! தேவையும்!