Fact Check : பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டாரா பிரசாந்த் கிஷோர்? தீயாய் பரவும் செய்தி உண்மையா?
பிரசாந்த் கிஷோரை தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக பாஜக நியமித்துள்ளதாக அக்கட்சியின் செய்திக்குறிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.
பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்திக்குறிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. நேற்றைய (May 22) தேதியில் வெளியானது போல் இந்த கடிதம் வாட்ஸ்அப்பிலும் பரவி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவுடன் இணைந்து பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று கணித்துள்ளார். இச்சூழலில்தான், பாஜக தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், அதில் உண்மை இல்லை. ஏமாற்றும் வகையில் அந்த செய்திக்குறிப்பு பரப்பப்பட்டு வருகிறது.
உண்மையை கண்டுபிடித்தது எப்படி? பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள செய்திக்குறிப்புப் பிரிவையும் அதன் சமூக ஊடக கணக்குகளையும் ஆராய்ந்தோம். கட்சியின் செய்தித் தொடர்பாளராக கிஷோரை நியமிப்பது குறித்து எந்த ஒரு செய்தியும் அதில் இல்லை. நேற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்திக் குறிப்புகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரம் பற்றியவை.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக சி.ஆர். கேசவனை அறிவித்து, பாஜக வெளியிட்ட அறிவிப்பே கடைசியாக வெளியான நியமன அறிவிப்பாகும். கடந்த மார்ச் 27ஆம், அந்த அறிவிப்பு வெளியானது. அதே நாளில், தேர்தலுக்கான மாநில பொறுப்பாளர்களையும் கட்சி அறிவித்தது.
பாஜக இணையதளத்தில் உள்ள செய்தித் தொடர்பாளர்கள் பிரிவில் அக்கட்சியின் தேசிய மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர்கள் அனைவரையும் பட்டியலிட்டுள்ளது. அவர்களின் தலைமை செய்தித் தொடர்பாளராக அனில் பலுனி உள்ளார். அவர்களின் ஊடகப் பொறுப்பாளராகவும் அவரே செயல்பட்டு வருகிறார். அவர்களுக்கு 29 தேசிய செய்தித் தொடர்பாளர்கள் உள்ளனர். ஆனால், அதில் கிஷோர் கிஷோர் இல்லை.
பாஜகவின் தேசிய செயலாளர் அருண் சிங் பெயரில் அந்த செய்தி குறிப்பி வெளியாகி இருந்தது. இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டோம், "அந்த செய்திக் குறிப்பு போலியானது. அது, ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது.
அதேபோல, Kishorக்கு பதில் Kishore என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் நடத்தி வரும் ஜன் சுராஜ் என்ற இயக்கும் இதுகுறித்து எதிர்வினையாற்றியுள்ளது.
வைரலாகி வரும் செய்தி குறிப்பை காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து வருவதாக அந்த இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். கட்சியின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் அரசியல் ஆலோசனை நிறுவனமான I-PACலிரிந்து கடந்த 2021ஆம் ஆண்டு விலகினார். அதன் பிறகு, ஜன் சுராஜ் அமைப்பை தொடங்கினார்.
முடிவு என்ன? பாஜகவின் தேசிய தலைமை செய்தித் தொடர்பாளராக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதாக போலியான செய்திக் குறிப்பு பகிரப்பட்டு வருகிறது. பாஜக அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக LogicallyFacts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.