கருணாநிதி-எம்.ஜி.ஆர்., இருவரும் அரசியல் ரீதியாகவும், அரசியலை கடந்தும் நல்ல நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. கண்ணியமான நட்புக்கு சொந்தக்காரர்கள். அவர்களின் நட்புக்கு பல உதாரணங்கள் உண்டு. அப்படி ஒரு உதாரணம், ரஜினியின் ஊர்காவலன் படம் உருவான பின்னணியிலும் இருந்தது. பொதுவாக ஒரு படம் உருவாகும் போது, பல இன்னல்களை கடந்து தான் அதற்கான வாய்ப்பை அந்த இயக்குனர் பெற்றிருப்பார். ஆனால் ஊர்காவலனை பொறுத்தவரை, ‛கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொட்டும்’ என்பார்களே... அப்படி உருவான வாய்ப்பில் வந்தது தான் ஊர்காவலன். ஆனால், அது அமைந்த விதம், அதில் ஏற்பட்ட சுவாரஸ்யங்கள் எல்லாம் வழக்கம் போல இன்னும் தித்திப்பாய் இருக்கும். 




மனோபாலாவை தேடி வந்த ஃபோன்!


மனோபாலாவை காமெடி நடிகராக பார்க்கும் இந்த தலைமுறைக்கு அவர் பல ஹிட் படங்களை தந்த இயக்குனர் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறைப்பறவை படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திற்கான கதை பற்றி சிந்திக்கவும், கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யவும் கலைமணி உடன் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார் மனோபாலா. நல்ல உணவு, நல்ல கிளைமேட் என குற்றால குளுமையில் குதூகலித்துக் கொண்டிருக்கிறார். திடீரென விடுதி தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு, மனோபாலாவுக்கு வந்திருந்தது அந்த அழைப்பு. மொபைல் போன் இல்லாத காலகட்டம் அது. எப்படி அந்த விடுதியின் எண் வாங்கப்பட்டது, எப்படி மனோ பாலா அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பதெல்லாம் புதிரானது. இப்போது மனோபாலா பேசுகிறார். பிரபல சத்யா மூவிஸ் நிறுவனத்திலிந்து மேலாளர் பழனியப்பன் பேசுகிறார். ‛நாளை காலை 11 மணிக்கு வந்திடுங்க பாலா... ஆர்.எம்.வி., சார் உங்களை மீட் பண்ண விரும்புறார்னு...’ சொல்றாரு. ‛சார்... நான் குற்றாலத்துல இருக்கேன்...’ என மனோபாலா கூற, ‛எதையாவது பிடிச்சு வந்திருங்க...’ என கட் செய்கிறார் பழனியப்பன். 




சத்யா மூவிஸ்... பூம்பூகார் புரொடக்ஷன்...!


மனோபாலாவுக்கு ஒரே குழப்பம். நேராய் கலைமணியிடம் போய் விசயத்தை கூறுகிறார். ’பாலா... ஆர்.எம்.வீரப்பன் சார் புரொடக்ஷன். எம்.ஜி.ஆர்.,யோட முழு ஆசி பெற்ற கம்பெனி. மிஸ் பண்ணிடாத. கிளம்பு... கிளம்பு கிளம்பு...’ என கலைமணி அறிவுரை கூறுகிறார். இப்போது அதே விடுதி எண்ணுக்கு இன்னொரு அழைப்பு வருகிறது. மனோபாலா போய் பேசுகிறார். பூம்புகார் புரொடக்ஷனில் இருந்து முரசொலி செல்வம் பேசுகிறார். நாளை காலை 10:30 மணிக்கு கலைஞரை பார்க்க வேண்டும். கிளம்பி வாங்க என்கிறார். மனோபாலாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கலைமணியிடம் ஓடுகிறார். விவரத்தை கூறி, அதிர்ந்து போன கலைமணி, ‛யோவ்... உனக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொட்டுது... உடனே கிளம்பு...’ என அனுப்புகிறார். காலை 10:30 மணிக்கு முதல் ஆளாய் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறைக்கு, முரசொலி செல்வத்துடன் சென்று சேர்க்கிறார் மனோபாலா. 




விட்டுக்கொடுத்த கருணாநிதி!


‛வாங்க... டைரக்டர்...’ என வரவேற்கிறார் கருணாநிதி. ‛அப்பா...’ என தயங்குகிறார் மனோபாலா. ‛சொல்லுப்பா...’ என புரிதலுடன் கேட்கிறார் கருணாநிதி. முன்னரே செல்வத்திடம் விபரத்தை கூறியிருந்தார் மனோபாலா. அவர் தயங்குவதை பார்த்து, செல்வமே தகவலை கூறுகிறார். ‛சத்யா மூவிஸில் பேசியிருக்காங்க... கேள்விப்பட்டவரை ரஜினி தான் ஹீரோனு சொல்றாங்க... அதான் என்ன செய்யுறதுனு. அவருக்கு தெரியல...’ என விசயத்தை போட்டு உடைக்கிறார் முரசொலி செல்வம். ‛இதுல என்னய்யா குழப்பம்... பெரிய புரொடக்ஷன்...ரஜினி மாதிரி பெரிய ஹீரோ... நாளைக்கு உனக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும்... எதிர்காலத்திற்கு நல்லது... போ போ... போய் அந்த படத்தை பண்ணு. நாங்க சும்மா ஒரு மலையாள  படத்தை டப் செய்யலாம்னு இருந்தோம்... நீ போய் அந்த படம் பண்ணு...’ என கருணாநிதி வாழ்த்து கூற, மனோபாலாவுக்கு பெருமூச்சு. கருணாநிதியிடம் ஆசி வாங்கிவிட்டு அடுத்த நொடியே குறிப்பிட்ட நேரப்படி, சத்யா மூவிஸ் அலுவலகம் செல்கிறார் மனோபாலா . 


இசையமைப்பாளரை மாற்றிய ஆர்.எம்.வி.,!


கருணாநிதியை சந்தித்ததையோ, அவர் வாழ்த்தி அனுப்பியதையோ மனோபாலா கூறவில்லை. ஆனால் அதற்கு முன்பே அதை ஆர்.எம்.வி., அறிந்திருந்தார். கருணாநிதி வரவேற்றபடியே, ஆர்.எம்.வி.,யும் வரவேற்கிறார். அருகில் சிறந்த எழுத்தாளரான ஏ.எல்.நாராயணன் அமர்ந்திருக்கிறார். அவர் தான் கதை, வசனம்.  60களில் வந்த சிறுகதையை வைத்து படம் எடுக்கப் போவதாக கூறுகிறார் ஆர்.எம்.வி. கதையை கேட்ட மனோபாலாவுக்கு திருப்தி. ஆனால் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிறார். தாராளமாக செய்யுங்கள், ஹீரோவுக்கான படமாக இருக்க வேண்டும் என கூறுகிறார் ஆர்.எம்.வி. இப்போது கதை ரெடி. மனோபாலாவுக்கு அப்போது இசையமைப்பாளர் சிற்பி அறிமுகமாகியிருந்தார். அவரை வைத்து தான் அந்த படத்தை எடுக்க வேண்டும் என முடிவும் செய்திருந்தார். பாடல்களை கேட்டுவிட்டு சிற்பியை ஓகே செய்துவிட்டனர். நாளை கம்போசிங். வடபழனி முருகன் கோயில் போய் சாமி கும்பிட்டுவிட்டு வா... என சிற்பியை கூறிவிட்டு, அவருக்கு முன்பாக அலுவலகம் போகிறார் மனோபாலா. அறைக்குள் நுழையும் முன்பே ஆர்மோனியம் சத்தம் கேட்கிறது. வெளியில் இருந்த பழனியப்பனிடம் விபரத்தை கேட்கிறார் மனோபாலா. ‛சங்கர் கனேஷ் வந்துள்ளார், கம்போசிங் நடக்கிறது ,’என்கிறார் பழனியப்பன். மனோபாலாவுக்கு தலை சுற்றுகிறது. 




மனம் வருந்திய மனோபாலா... புரிய வைத்த ஆர்.எம்,வி.,!


மனோபாலா அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் அங்கு பிரசாதத்துடன் வந்து சேர்கிறார் சிற்பி. அவரிடம் விபரத்தை கூற, சிற்பிக்கு மயக்கமே வந்துவிட்டது. அவரை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைக்கிறார் மனோபாலா. மனோபாலாவுக்கு ஒரே ஆத்திரம். பழனியப்பனிடம் போய், ‛இங்கே பாருங்க... படம் முடியும் வரை என் பெயரை எதிலும் போட வேண்டாம்... எப்போ என்னை மாற்றுவீங்கன்னு தெரியல...’என கடுப்போடு கூறி சென்றுவிட்டார். பின்னர் ஆர்.எம்.வி., அழைக்க அவரை சந்திக்க வருகிறார் மனோபாலா. தன் மன வருத்தம் அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார் மனோபாலா. பொறுமையாக குறுக்கிடாமல் அனைத்தையும் கேட்கிறார் ஆர்.எம்.பி., இப்போது, அவர் பேசத் தொடங்குகிறார். ‛‛பாலா... உங்க நிலைமை தெரியுது... எப்படி பார்த்தாலும் இதில் ஒரு வியாபாரம் இருக்கும். யார் யார் படத்தில் இருக்காங்க என்பதை பொறுத்தது அந்த வியாபாரம். நீங்க சொல்ற பையன் நல்ல மியூசிக் டைரக்டரா இருக்கலாம். ஆனால் இங்கே விற்பனைக்கு அடையாளம் கேட்பாங்க. பெரிய புராஜக்ட். பெரிய ஹீரோ. இந்த இடத்தில மியூசிக்ல சமரசம் செய்தால், நமக்கு கிழே இருக்கிற வினியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவாங்க. என்னை நம்பி இருக்கிற அவங்களை பாதுகாக்கிற கடமை இருக்கிறது அல்லவா... நேற்ற இரவு தான் 9 மணிக்கு தான் சங்கர் கணேஷ் வந்து பார்த்துட்டு போனார். ராத்திரி 11 மணிக்கு உங்களுக்கு தகவல் சொல்லிருக்கனும். சொல்லாதது என் தப்பு தான். நம்ம மனோபாலா தானே காலையில் சொல்லிடலாம்னு நெனச்சுட்டேன்... என் மேல தான் தப்பு’’ என ஆர்.எம்.வி., சொல்ல, அந்த நேர்மையான பதிலை ஏற்றுக்கொண்டார் மனோபாலா. அதே நேரத்தில், ‛சார்... நாம வேண்டாம்னு சொன்ன சிற்பி.. பெரிய மியூசிக் டைரக்டரா வருவான்... நீங்க பாப்பீங்கனு...’ சொல்லிட்டு புறப்படுகிறார் மனோபாலா. 




ரஜினி ஹேர் ஸ்டைலை மாற்றிய மனோபாலா!


இப்போது ரஜினியிடம் கதை சொல்லியாகிவிட்டது. ஏதாவது ஒரு சேஞ்ச் பண்ணனும் பாலா என ரஜினி கேட்கிறார். ‛சார்... உங்க ஹேர் ஸ்டைலை மாற்றுவோம்... ஒரே மாதிரி ரொம்ப நாளா வெச்சிருக்கீங்க...’ என மனோபாலா கூற, அதை ஏற்றுக்கொண்டார் ரஜினி. பின்நாளில் அந்த ஹேர் ஸ்டைல், ரஜினியின் அடையாளமாகவே மாறியது நாடறிந்தகதை. இப்போது மைசூரூவில் சூட்டிங். ஒட்டுமொத்த யூனிட்டோடு அங்கு புறப்பட்டு விட்டார் மனோபாலா. இதுவரை இல்லாத புதிய ரஜினியை ஒட்டுமொத்த யூனிட்டும் பார்க்கிறது. சூட்டிங் ஸ்பார்ட்டில் ரஜினியை பார்த்த ராதிகா, ‛சார்... 10 வயசு குறைஞ்சு போச்சு...’ என கூற, எடுத்த முடிவு சரி தான் என ரஜினியும் அதை ரசித்துக் கொண்டார். ‛மாசி மாதம் தான் சொல்லு சொல்லு...’ பாடல் முதலில் எடுக்கப்படுகிறது. சூட்டிங் முடிந்த கையோடு, ஒட்டுமொத்த யூனிட்டும் தினமும் மாலை 6 மணிக்கு மனோபாலா அறையில் அசெம்பிள் ஆவதும், கலகலவென பேசி தீர்ப்பதுமாய் சூட்டிங் போகிறது. இந்த தகவல் ஒருநாள் ரஜினிக்கு வருகிறது. 




 வேண்டாம் என்ற மனோபாலா... மீறி வந்த ரஜினி!


மனோபாலாவை அழைத்து, ‛என்ன பாலா... எல்லோரும் மாலை 6 மணிக்கு மீட் பண்றீங்களாம்... என்னை கூப்பிடவே இல்லை’’ என கேட்கிறார் ரஜினி. ‛சார்... நீங்க வந்தா ஒருத்தனும் வாயை திறக்கமாட்டான்... தப்பா நெனச்சுக்காதீங்க’ என கூறி மனோபாலா வேலையில் மும்முரம் காட்ட, மாலையில் வழக்கம் போல யூனிட் மனோபாலா அறையில் கூடுகிறது. திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக அறைக்கு வந்து கதவை தட்டுகிறார் ரஜினி. திறந்தால் அனைவரும் அதிர்ச்சி. அவர் உள்ளே வர, ஒருத்தர் கூட வாய் திறக்கவில்லை. ‛ஏன் அமைதியா இருக்கீங்க... பேசுங்க’ என ரஜினி கூற, ‛சார் இதுக்கு தான் சார் நான் சொன்னே’ என மனோபாலா கூற, ‛அதெல்லாம் ஒன்னும் இல்ல.. பேசுங்க’ என அனைவருடனும் கலகலப்பாய் இருந்துவிட்டு புறப்பட்டார் ரஜினி. அந்த படத்திற்காக ரஜினியிடம் வாங்கிய கால்ஷிட் 50 நாட்கள். ஆனால் டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து 48 நாளில் அவரது கால்ஷிட் முடித்து கொடுத்து படத்தையும் நிறைவு செய்தார் மனோபாலா. படம் முழுக்க வழக்கமான பார்மட்டில் எடுத்துவிட்டு, கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சினிமாஸ்கோப்பில் எடுக்கலாம் என முன்பே திட்டமிட்டிருந்தனர். அதன் படி எடுத்தும் முடித்தார்கள். சில்வர் ஜூப்ளி கண்ட ஊர்காவலன், ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். இயக்குனர் மனோபாலாவுக்கு மறக்கவே முடியாத படம். 




ஏமாற்றிய எம்.ஜி.ஆர்.,! 


படம் ஹிட். 100வது நாளில் விழா வைத்து எம்.ஜி.ஆர்., கையால் அனைவருக்கும் ஷீல்டு கொடுக்க இயக்குனர் மனோபாலாவும், ஆர்.எம்.வி.,யும் திட்டமிடுகிறார்கள். முதல்நாள் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்.,யும் அந்த வாக்குறுதியை தந்திருந்தார். திடீரென எம்.ஜி.ஆர்.,க்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் வருகைக்காக ஒட்டுமொத்த யூனிட்டும் காத்திருக்கிறது. ஆனால் அவர் இறந்த செய்தி வருகிறது. எம்.ஜி.ஆர்., கையால் பாராட்டு பெற வேண்டும் என்கிற ஏக்கத்தில் இருந்த மனோபாலாவுக்கு பெரிய ஏமாற்றம். எம்.ஜி.ஆர்., இறப்பில் நாடே அழுதது. மனோபாலாவுக்கு அந்த தூக்கும் இன்னும் கூடுதலாகவே இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இப்போது ஜானகி முதல்வராகிறார். ஆர்.எம்,வி., முயற்சியில் ஜானகி முன்னிலையில் விழா நடந்து அனைவருக்கும் வெற்றி விழா ஷீல்டு தரப்படுகிறது. கருணாநிதியில் தொடங்கி... எம்.ஜி.ஆர்.,யில் முடிந்தது தான் ஊர்காவலன்! 


 


மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க....


ப்ளாஷ்பேக்: பார்த்திபனுடன் சண்டை... நடிக்க மறுத்த ரேவதி... சபதம் போட்டு விக்ரமன் எடுத்த ‛புது வசந்தம்‛!


ப்ளாஷ்பேக்: சிவக்குமார்-ஸ்ரீகாந்த் வாய்ப்பை தட்டிப் பறித்த கமல்-ரஜினி: இப்படி தான் இளமை ஊஞ்சல் ஆடியது!


ப்ளாஷ்பேக்: தடுமாறிய விஜயசாந்தி... தத்தளித்த மணிவண்ணன்...ஈரத்தில் சிக்கிய கல்லுக்குள் ஈரம்!


ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... காமெடியன் கவுண்டமணி உருவான கதை!


ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!


பிளாஷ்பேக்: விஜயகாந்த்-ஆர்.கே.செல்வமணி லடாய்... ட்ராப்... ட்ராப்... ட்ராப்... புலன்விசாரணை பிறந்த கதை!