தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெற்றியும் பல அவமானங்களையும், பல இடையூறுகளையும், தடைகளையும் தாண்டி கிடைப்பது என்பது அனைவரும் அறிந்ததே. இன்று தமிழ் சினிமாவில் கோலோச்சுபவர்கள், துவக்கத்தில் சந்தித்த சிரமங்களும், ஒரு படைப்புக்கு அவர்கள் தந்த விலையும் மதிப்பற்றது. ஆனால் அவர்கள் சிரமங்களை சந்தித்தாலும், அவர்களின் படைப்புகள் வெற்றி பெற்றதால் தான் இன்ற உயர்ந்து நிற்கிறார்கள். அந்த வரிசையில்,தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. இன்று பல படங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது முதல் படத்தை எடுத்து முடிப்பதற்குள் அவர் சந்தித்த பிரச்னைகளை அறிந்தால் ஆடிப்போவீர்கள். இதோ எல்லோரும் கொண்டாடி தீர்த்த புலன்விசாரணை படம் உருவான வரலாறும்... விஜயகாந்த்-செல்வமணி மோதலும்... உங்களுக்காக ஒரு பிளாஷ்பேக்...




ராவுத்தரின் ஒரே பதில்... தாமதமாக புரிந்த செல்வமணி!


மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி விஜயகாந்தை சந்தித்து கதை சொல்ல முயற்சிக்கிறார். இப்ராஹிம் ராவுத்தரை சந்திக்குமாறு விஜயகாந்த் கூற, அவரை சந்திக்கிறார் ஆர்.கே.செல்வமணி. ‛அண்ணனுக்கு அடுத்த 2 ஆண்டுக்கு கால்ஷீட் இல்லை,’ எனக்கூறியுள்ளார் ராவுத்தர். சரி 2 ஆண்டு கழித்து வருவோம் என மீண்டும் மணிவண்ணனிடம் உதவியாளராக தொடர்கிறார் செல்வமணி. இப்போது ஓராண்டு கடக்கிறது. சரி, போய் மீண்டும் கேட்கலாம் என ராவுத்தரிடம் செல்கிறார். இப்போதும் அதே பதில், ‛அண்ணனுக்கு அடுத்த 2 ஆண்டுக்கு கால்ஷீட் இல்லை...’ என்பது தான். எத்தனை ஆண்டு கழித்து வந்தாலும், இதே பதில் தான் வரும் என்பது அப்போது தான் செல்வமணிக்கு தெரிகிறது. மீண்டும் மணிவண்ணனிடம் உதவியாளராக சேர அவருக்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் விஜயகாந்த்தை தவிர்த்து வேறு ஹீரோவை வைத்து படம் செய்ய எண்ணமும் இல்லை. ராவுத்தரை தொடர்ந்து சந்திக்கும் படலத்தை தொடங்குகிறார். 




விஜயகாந்தின் ஹாலிவுட் ஆசை!


அப்போது ராவுத்தருக்கு ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் விஜயகாந்த்தை நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பதை செல்வமணி அறிகிறார். நிறைய ஆங்கில போஸ்டர்களை எடுத்து அதில் உள்ள ஹீரோக்களின் தலைக்கு பதிலாக விஜயகாந்த் படங்களை ஒட்டி வைத்து ஒரு ஆல்பம் தயாரிக்கத் தொடங்கினார். அப்போது அவர் தங்கியிருந்த ரெங்கநாதன் தெரு சுகந்தி மெஸ்ஸில் அவருடன் ஜோதி என்கிற ஆர்ட்டிஸ் இருந்துள்ளார். அவர், செல்வமணியின் போஸ்டர்களை பார்த்து, பெயிண்ட் பண்ணி தருகிறேன் என்று கூறியுள்ளார். செல்வமணியிடம் இருந்த 10 போஸ்டர்களை 100 ஓவியங்களாக தத்ரூபமாக தீட்டினார். அதற்காக அவர் எடுத்துக் கொண்டிருந்த காலம் 10 மாதம். இப்போது பக்காவாக ஒரு ஆல்பம் ரெடி. தனது கதைக்கான கதாபாத்திரத்தை ஆல்பமாக மாற்றிவிட்டார் செல்வமணி. அதை பார்த்த அவரது நண்பர் சரவணன், இந்த ஓவியங்களை போட்டோவாக எடுத்து ஆல்பம் ஆக்கலாம் என ஐடியா தருகிறார். அவரே அந்த பணியையும் செய்கிறார். இப்போது 100 ஓவியங்கள் 300 போட்டோக்கள் ஆகிறது. தனது கதையை ஆல்பமாக மாற்றி விட்டு இப்போது மீண்டும் ராவுத்தரை சந்திக்க செல்கிறார் செல்வமணி. அப்போது அவரிடம் அதே பதில், ‛அண்ணனுக்கு கால்ஷீட் இல்லை... 2 ஆண்டு ஆகும்...’ என்பதே. செல்வமணியும் இந்த பதிலை எதிர்பார்த்தவர் தான். தான் வாய்ப்பு கேட்க வரவில்லை, இந்த ஆல்பத்தை மட்டும் பாருங்கள் என ராவுத்தரிடம் கூறுகிறார். நாளை காலை 5 மணிக்கு வாங்க என அனுப்புகிறார் ராவுத்தர். 




30 இரவுகள் மட்டுமே கால்ஷீட்!


சரியாக காலை 5 மணிக்கு ராவுத்தரை சந்திக்கிறார் செல்வமணி. ஆல்பத்தின் முதல் பக்கத்தை பார்த்த ராவுத்தர். அடுத்த 5 நிமிடத்திற்கு அடுத்த பக்கத்தை புரட்டவில்லை. காலை 5 மணிக்கு பார்க்கத் தொடங்கிய ஆல்பத்தை முடிக்க, காலை 9:45 மணி ஆனது. இப்போது இப்ராஹிம் ராவுத்தர் இம்பிரஸ். ‛அண்ணன் டேட் இல்லை... 30 நைட் வாங்கித் தர்றேன்... பண்ணமுடியுமா...’ என கேட்டுள்ளார் ராவுத்தார். 10 நைட் கிடைத்தால் கூட போதும் என்கிற மனநிலையில் இருக்கிறார் செல்வமணி. 1988 செப்டம்பரில் பேசி, நவம்பரில் பூஜையை துவக்குகிறார்கள். 2 ஆண்டுகள் கால்ஷீல் இல்லை என்று கூறியவர்கள், 2 மாதத்தில் சூட்டிங் வந்தனர். கதை மீதுள்ள நம்பிக்கையில் விஜயகாந்த்-இப்ராஹிம் ராவுத்தர் இணைந்து தயாரிக்க முடிவு செய்தனர். 




7 நாள் சூட்டிங்... கழற்றிவிடப்பட்ட செல்வமணி....!


முதல்நாள் சூட்டிங்கில் கலை இயக்குனர்கள், காஸ்ட்யூம் டீம் உடன் செல்வமணிக்கு லடாய். புது முக இயக்குனர் என்பதால், எதை எப்படி சொல்ல வேண்டும் என்கிற பக்குவம் அப்போது செல்வமணிக்கு இல்லை. இப்போது விஜயகாந்த் சூட்டிங் வந்து விட்டார். அருகில் பாடலுக்காக பிரமாண்ட செட் போடப்பட்டு, ஜான் ஆடிக்கொண்டிருக்கிறார். விஜயகாந்த் தயாராகிக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த காஸ்டியூமர் உதவியாளர் ஒருவர், தேம்பி தேம்பி அழுகிறார். விஜயகாந்த் என்னவென்று கேட்கிறார். ‛எவ்ளோ பெரிய செட்... இதில் நீங்க ஆடாமல், ஜான் ஆடுறார்... மனசு கேட்கல...’ என கொளுத்தி போட. விஜயகாந்த் பற்றிக் கொண்டார். ராவுத்தர் அப்போது சமரசம் செய்கிறார். இப்படி முதல்நாளே மோசமான நாளாக அமைகிறது. அப்போது தெரியாது, அதன் பின் இதை விட பெரிய பூகம்பங்கள் வர காத்திருக்கிறது என்று. வழக்கமான நடைமுறைகளை தன் பாணிக்கு மாற்ற முயற்சித்ததால், ஒட்டுமொத்த டெக்னீசியன்களும் ஆர்.கே.செல்வமணிக்கு எதிரானார்கள். 7 நாட்கள் சூட்டிங்கில் இவை அனைத்தும் நடந்திருந்தது. 30 நாளில் படம் முடிக்க வேண்டும். அதன் பின் அலுவலகம் போகும் செல்வமணியை சந்திக்க அனைவரும் தவிர்க்கிறார்கள். ஏதோ ஒரு மாற்றத்தை செல்வமணி உணர்கிறார். அம்மா கிரியேசன்ஸ் சிவா வந்து, செல்வமணிக்கு ரூ.1000க்கு செக் கொடுத்துள்ளார். அது செட்டில்மெண்ட் செக் என்பதை புரிந்து கொண்டார் செல்வமணி. அதை வாங்கும் போது, செல்வமணி கண்களில் கண்ணீர். கதை வேறு லெவலுக்கு சென்று விட்டது. புது முகத்தை வைத்து பண்ண வேண்டாம், வேறு இயக்குனரை வைத்து செய்யலாம் என ராவுத்தரும், விஜயகாந்தும் முடிவு செய்துவிட்டனர்.




காண்டசா கார் பிரச்னையில் சூட்டிங் நிறுத்தம்!


இயக்குனர் அரவிந்த்ராஜை வைத்து அந்த படத்தை எடுக்க பேச்சு வார்த்தை நடந்தது. வேறோருவர் கதையை எடுக்க மாட்டேன் என அவர் மறுத்துவிட்டார். ராவுத்தரை சந்தித்த சிவா, அவர் மனதை மாற்றி மீண்டும் செல்வமணிக்கு வாய்ப்பை பெற்று தருகிறார். மீண்டும் சூட்டிங் தொடங்குகிறது. இப்போது கவர்னர் வரும் காட்சி எடுக்க வேண்டும். காண்டசா கார் வேண்டும். காண்டசா கார் இல்லையென்றால் நாளைக்கு சூட்டிங் நடக்காது என மேனேஜரிடம் செல்வமணி கூற, நாளை சூட்டிங்கை கேன்சல் செய்ய சொல்கிறார் செல்வமணி என விஜயகாந்திடம் தகவல் செல்கிறது. சூடான அவரும், அவன் என்ன சூட்டிங் கேன்சல் பண்றது... நான் செட்யூல் கேன்சல் பண்றேன் என படத்தை ட்ராப் செய்தார் விஜயகாந்த். மீண்டும் பழைய நிலை. அலுவலகம் சென்றால் யாரும் பார்க்கவில்லை. 3 மாதம் கடக்கிறது. இப்போது மணிவண்ணனை வைத்து படத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். என் உதவியாளர் படத்தை நான் எடுக்க மாட்டேன் என மறுக்கிறார் மணிவண்ணன். இதற்கிடையில் மணிவண்ணன் படத்தில் நடித்திக் கொண்டிருந்த விஜயகாந்த்தை, மணிவண்ணன் சமரசம் செய்கிறார். அனைவரையும் அழைத்து சமரசம் செய்த பின் மீண்டும் சூட்டிங் தொடங்குகிறது.




பேச்சுவார்த்தையை நிறுத்திய விஜயகாந்த்!


மீண்டும் சூட்டிங் தொடங்கினாலும் அடுத்தடுத்து  சின்ன சின்ன பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது. செல்வமணி உடன் பேசுவதை முற்றுலும் தவிர்த்துவிட்டார் விஜயகாந்த். சூட்டிங் வந்தால் கூட தூரத்தில் இருந்து ஜூம் செய்து படம் எடுக்கும் அளவிற்கு விரிசல். ராவுத்தரும் ஒரு கட்டத்தில் சமரசம் செய்து வெறுத்து ஒதுங்கிவிட்டார். இதனாலேயே விஜயகாந்திற்கும் ராவுத்தருக்கும் மனம் வருத்தம் ஆகும் சூழல் வந்துவிட்டது. சொன்ன கால்ஷீல் முடிந்ததால், டைம் இருக்கும் போது நடிக்க வந்தார் விஜயகாந்த்.  ஒரு ஷூட்டிங் எப்படி நடக்க கூடாதோ... அப்படியெல்லாம் நகர்ந்தது. சொன்னதை விட பட்ஜெட் அதிகமா போகுது. 60 ஆயிரம் அடியில் எடுப்பதாக கூறிய படம் இப்போது 90 ஆயிரம் அடியில் எடுக்கப்பட்டிருந்தது. முதல் பிரதி வந்து படத்தை பார்த்த யாருக்கும் பெரிதாய் பிடிக்கவில்லை. ஒரு 4 நாள் கொடுங்கள்; எல்லாத்தையும் சரி செய்கிறேன் என்கிறார் செல்வமணி. அதெல்லாம் முடியாது ஒரு நாள் வேணும்னா தர்றேன் என்கிறார் ராவுத்தார். 24 மணி நேரமாக கேட்டுப்பெற்ற செல்வமணி, 2000 அடியில் சில காட்சிகளை எடுத்து படத்தை நிறைவு செய்கிறார். 




முன்னோட்ட காட்சியை பார்க்க செல்வமணிக்கு அனுமதி மறுப்பு!


1988 ல் பூஜை போட்ட படம்... 30 நாளில் முடிக்க திட்டமிட்ட படம்... இப்போது 1990. ஜனவரி 14ல் பொங்கலுக்கு ரிலீஸ். நாளைக்கு ரிலீஸ் இன்று இறுதி நகல் வருகிறது. அன்று இரவு முன்னோட்ட காட்சியை பார்க்க திட்டமிடுகிறார்கள். தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தாரை படம் பார்க்க அழைத்து வருகிறார் செல்வமணி. ஆனால் அவர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த அளவிற்கு செல்வமணி இன்னும் அந்நியப்பட்டு நிற்கிறார். ராவுத்தரிடம் முறையிட செல்கிறார் செல்வமணி. ‛என்னய்யா படம் ஓடுமா...’ என கேட்கிறார் ராவுத்தார். ஓடும் சார் என்கிறார் செல்வமணி. ‛ஓடலைன்னா நான் இனி இந்த ஆபிசுக்கு வர முடியாது... நீ இந்த ரோட்டுக்கே வர முடியாது...’ என தன் நிலையை கூறியிருக்கிறார் ராவுத்தர். 1990 ஜனவரி 14ல் படம் ரிலீஸ். படம் என்ன ஆனது... என்ன மாதிரி இம்பாக்ட் எதுவும் செல்வமணிக்கு தெரியவில்லை. மறுநாள் இரவு தன் நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு சென்றார் செல்வமணி. அவர் நினைத்த இடத்தில் கிளாப், மவுனம், சிரிப்பு, அழுகை என ரசிகர்கள் ரசிப்பும், கைத்தட்டலும் அவரை உற்சாகப்படுத்துகிறது. 1000 பேர் பார்க்க வேண்டிய தியேட்டரில் 3ஆயிரம் பேர் படம் பார்ப்பதை கண்டு மகிழ்ச்சியோடு வெளி வந்தார். நண்பர்களுக்கு அவருக்கு பார்ட்டி வைக்கிறார்கள். வாழ்க்கையில் முதல்  பார்ட்டி. அறையில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறார் செல்வமணி. 




ஒரே இரவில் மாற்றத்தை தந்த வெற்றி!


விடிகிறது. செல்வமணியை அழைத்து வர ராவுத்தர் ஆணையிடுகிறார். ஆட்டோவில் சென்று கதவை தட்டுகிறார்கள். அவர் திறக்கவில்லை. திரும்பிவிடுகிறார்கள். ஆட்டோவில் சென்றதற்கு கடிந்து கொள்கிறார் ராவுத்தார். மீண்டும் அனுப்புகிறார் ஜிப்சியில் போய் கதவை தட்டுகிறார்கள் திறக்கவில்லை. மீண்டும் போய் ராவுத்தரிடம் கூறுகிறார்கள். ஜிப்சியை ஏன் கொண்டு சென்றீர்கள், கார் எடுத்து செல்லுங்கள் என கடிந்து கொள்கிறார் ராவுத்தர். இப்போது கார் செல்கிறது. பார்ட்டி கலக்கம் முடிந்து எழுந்த செல்வமணி கதவை திறந்தார் கார் நிற்கிறது. நேராக ராவுத்தர் அலுவலகம் செல்கிறார். ‛என்னை மீண்டும் ஆபிஸ் வர வெச்சுட்ட...’ என நன்றி தெரிவித்தார் ராவுத்தார். ஆனாலும் அப்போதும் விஜயகாந்த் பேசவில்லை. விஜயகாந்த் திருமணத்தில் கிப்ட் உடன் வரிசையில் நின்ற செல்வமணி தள்ளிவிடப்படுகிறார். அவரை தாங்கி பிடித்த விஜயகாந்த், ‛எங்க டைரக்டர்யா....’ என மேடைக்கு இழுக்கிறார். ‛சார் கிப்ட் கீழே விழுந்திருச்சு...’ என செல்வமணி கூற, ‛நீங்க தான் என்னோட கிப்ட்... எவ்வளவு பெரிய ஹிட் கொடுத்திருக்கீங்க...’ என அனைவரும் கூடியிருந்த மேடையில் செல்வமணியை அங்கீகரித்தார் விஜயகாந்த்.




1988 ல் தொடங்கி பிரச்னை..... பிரச்னை.... பிரச்னை.... என 30 நாளில் முடிய வேண்டிய படம் 2 ஆண்டுகள் கடந்து நிறைவு பெற்றதும். போனால் போகட்டும் என முடிக்க நினைத்த படம், அதன் பின் வசூலை குவித்து, தியேட்டரை நிரப்பிய படம் தான் புலன்விசாரணை.