தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு படம் கொண்டாடப்படும். அந்த வகையில் 90ஸ் என்கிற அத்தியாயத்தை துவக்கி வைத்து, இசை என்கிற இன்பக்கடலில் அனைவரையும் நீந்த வைத்து, பொழுதுபோக்கில் அனைவரையும் புதைத்து, சென்டிமெண்ட்டில் உருக வைத்த படம் புதுவசந்தம். ஒவ்வொரு படைப்பு தொடங்கும் போதும், அதன் பின்னணியில் ஏதாவது ஒரு சுவாரஸ்யம் இருக்கும். ஆனால் புது வசந்தம் தொடங்கியதே சுவாரஸ்யம் தான். குடும்பங்களின் இயக்குனர் என கொண்டாடப்பட்ட இயக்குனர் விக்ரமனின் முதல் படம். இசை அருவி எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தபடம். இதோ புது வசந்தம் வந்த வழியை பின்நோக்கி பார்க்கலாம்... 


முதல் பாதை ட்ராப்... புதிய பாதை ஓகே!


உதவி இயக்குனர்களின் போராட்ட வாழ்க்கையே, தனிக்கதையாக எழுதலாம். அப்படி ஒரு போராட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் தான் இயக்குனர் விக்ரமன். நல்ல செல்வாக்கும், வளமும் கொண்ட குடும்ப பின்னணியை கொண்டவர். தினமும் பலருக்கு உணவளிக்கும் குடும்பம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒருவேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல், வடபழனி பஸ்ஸ்டாண்டில் படுத்து வாய்ப்புகளை தேடியவர் விக்ரமன். மணிவண்ணன் போன்ற பல டைரக்டர்களிடம் வாய்ப்பை பெற்று, ஒவ்வொருவராக மாறி, இப்போது ராஜேந்திரகுமார் என்கிற டைரக்டரிம் உதவி இயக்குனராக இருக்கிறார் விக்ரமன். அவர்கள் எடுக்கும் படத்திற்கு இரு தயாரிப்பாளர்கள், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் படத்தை ட்ராப் செய்கிறார்கள். இப்போது விக்ரமன் இயக்குனர் பார்த்திபனிடம் இணைகிறார். 1986ல் முதல்பாதை என்கிற படத்தை இயக்குகிறார் பார்த்திபன். அவரிடம் உதவியாளராக விக்ரமன். தனது சிஷ்யன் பார்த்திபனுக்காக பாக்யராஜ் அந்த படத்தை தயாரிக்கிறார். ஆனால் படம் பாதியிலேயே ட்ராப் ஆகிறது. 1986ல் இருந்து பார்த்திபன் அடுத்த முயற்சியை தொடங்குகிறார். 1988 ல் தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. படம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. 1989 ஏப்ரல் 14ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார் பார்த்திபன். முதல் பிரதியும் வந்துவிட்டது. 




பார்த்திபன்-விக்ரன் மனஸ்தாபம்!


இதற்கிடையில் ஏதோ ஒரு இடத்தில் இயக்குனர் பார்த்திபனுக்கும், உதவி இயக்குனர் விக்ரமனுக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. அது பெரிய விரிசலாகி மோதலாகிறது. ஒருசில நாட்களில் படம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இந்த நேரத்தில் இந்த மோதல் நடக்கிறது. ‛உங்க படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நான் ஒரு படம் எடுத்து ரிலீஸ் செய்கிறேன்...’ என சபதமிட்டு வெளியேறுகிறார் விக்ரமன். அது சாத்தியமில்லை என்பது அவருக்கும் தெரியும். ஆனால் ஒரு வேகத்தில் சபதம் எடுத்தாகிவிட்டது. ஒவ்வொரு தயாரிப்பாளராக படியேறி வாய்ப்புகளை கேட்கிறார் விக்ரமன். ஒரு இடத்தில் கூட மகிழ்ச்சியான தகவல் இல்லை, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியை அலுவலகத்தில் சந்திக்கிறார். ‛10 நிமிடத்தில் கதை சொல்ல முடியுமா...’ என கேட்கிறார் செளத்ரி. இதற்கு முன் பிற தயாரிப்பாளர்களிடம் சொல்லிய கதையை இம்முறை விக்ரமன் சொல்லவில்லை. புதிய ஐடியாவாக புதுவசந்தம் கதை பிறக்கிறது. 




ஒரு நொடியில் ஓகே ஆன புது வசந்தம்!


‛விக்ரமன் மாதிரி யாருமே கதை சொல்ல முடியாது....’ என, ஆர்.பி.செளத்ரி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதற்கான அடித்தளம் தான் புதுவசந்தம் கதை சொன்ன விதம். அழ வேண்டிய இடத்தில் அழுது, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து, பாட வேண்டிய இடத்தில் பாடி, காமெடி செய்ய வேண்டிய இடத்தில் காமெடி செய்து இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் கதையை சொல்லி முடித்தார் விக்ரமன். அவர் இம்ரஸ் செய்வதற்காக பாடல்கள் வரவேண்டிய இடத்தில் அதே சூழ்நிலைக்கு ஏற்ற ஹிந்தி பாடல்களை பாடியது தான் அதில் ஹைலைட். 10 நிமிடத்தில் முடிக்கச் சொன்ன ஆர்.பி.செளத்ரி, இப்போது ஒன்றரை மணி நேரம் கதை கேட்டிருக்கிறார். தயாரிப்பாளர் என்ன சொல்லப்போகிறார் என தவிப்போடு அமர்ந்திருக்கிறார் விக்ரமன். இதற்கு முன் அவர் தயாரிப்பாளர்களிடம் பெற்ற பதில், ‛அடுத்த வாரம் வாங்க பார்க்கலாம்...’ என்பது தான். அதே பதில் தான் அவரிடமும் வரப்போகிறது என்று எதிர்பார்க்கிறார் விக்ரமன். இப்போது கண்ணை ஒரு நொடி மூடி திறக்கிறார் செளத்ரி. ‛நல்லா இருக்கு... இப்படியே எடுத்தா கண்டிப்பா ஹிட் தான்...’ என செளத்ரி சொல்ல , விக்ரமனுக்கு உயிர் போய் உயிர் வருகிறது.




பட்ஜெட் கேட்ட ஆர்.பி.செளத்ரி... பதில் சொல்ல முடியாத விக்ரமன்!


இப்போது கதை பிடித்துவிட்டது, அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். ‛சரி... என்ன பட்ஜெட் வரும்னு சொல்லுங்க... நான் அதுக்கு ஏற்றமாதிரி முடிவு செய்றேன்னு...’ சொல்கிறார் செளத்ரி. பட்ஜெட் பற்றி விக்ரமனுக்கு எந்த புரிதலும் இல்லை. ‛சார்... எனக்கு அதை பற்றி தெரியவில்லை... புரொடக்ஷன் மேனேஜரிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன்...’ என விக்ரமன் கூற, ‛ஓகே டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க...’ என அனுப்புகிறார் செளத்ரி. தனக்கு அறிமுகமான புரொடக்ஷன் மேனேஜர் ஒருவரிடம் ஆலோசித்து, வெள்ளிக்கிழமை கதை சொன்ன ஆர்.பி.செளத்ரியிடம் ஞாயிற்று கிழமை பட்ஜெட் விபரத்தை தருகிறார் விக்ரமன். ரூ.23 லட்சம் பட்ஜெட்டில் புது வசந்தம் எடுக்க ஒப்பந்தமாகிறது. இப்போது புதிய பாதை ரிலீஸ்க்கு முன்பே படம் ஒப்பந்தமாகிவிட்டது. அந்த திருப்தி விக்ரமனுக்கு. 




மறுத்த ரேவதி... ஓகே சொன்ன சித்தாரா!


பார்த்திபனிடம் போட்ட சபதப்படி, அவர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நமக்கு படம் கிடைத்துவிட்டது, என்கிற குஷியோடு கம்போசிங் முடித்து சூட்டிங்கை விறுவிறுப்பாக தொடங்கினார் விக்ரமன். புது வசந்தத்தில் முதலில் அவர் நடிக்க வைக்க நினைத்தது ரேவதி. அவரை மனதில் வைத்து தான் கதை எழுதியிருந்தார். ரேவதியிடம் கதை சொல்கிறார். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், புதிய இயக்குனர், புதிய தயாரிப்பாளர் என்கிற பயம் அவரிடத்தில் இருந்திருக்கலாம். அதுவே தயக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அவர் அந்த வாய்ப்பை மறுக்கிறார். இப்போது வேறு ஹீரோயின் தேட வேண்டும். டைரக்டர் ஆர்.சுந்தராஜிடம் சில போட்டோ கலெக்ஷன்கள் இருக்கிறது. அதை நட்பு ரீதியாக பார்க்கும் விக்ரமனுக்கு சித்தாரா போட்டோ கிடைக்கிறது. சித்தாராவை அறிமுகம் செய்ய வேண்டும் என சுந்தர்ராஜன் திட்டமிட்டிருந்தார். இத்தனைக்கும் அப்போது புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் வருவதற்குள் அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம். அப்போது அறிமுகம் செய்வது ஒருவிதமான ட்ரெண்ட். புதுப்புது அர்த்தங்கள் படப்பிடிப்பில் சித்தாராவை சந்தித்து புதுவசந்தத்திற்கு அழைத்து வருகிறார் விக்ரமன். 





படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு லாபம்!


ஏப்ரலில் புதிய பாதை ரிலீஸ். மே மாதம் புது வசந்தம் சூட்டிங் நடக்கிறது. 23 லட்சம் பட்ஜெட் சொன்ன விக்ரமன், 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் படத்தை முடித்துவிட்டார். படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம். படம் வெளியான பின், எடுத்ததை விட லாபம். புது வசந்தம் எங்கெல்லாம் பரவி வசந்தம் தந்தது என்பதை தமிழ்நாடே அறியுமே. ஒரு பெண், சமூகத்தில் தனக்கு தொடர்பில்லாத ஆண்களுடன் கண்ணியமாய் வாழ முடியும் என்கிற திடமான கருத்தை விதைத்த படம். புதிய புரட்சியை மலரச் செய்த படம். பட்டிதொட்டியெல்லாம் ‛பாட்டு ஒன்னு நான் பாடட்டுமானு...’ காதில் ரீங்காரமாய் ஒலித்த படம். அந்த படத்தின் பேய் வெற்றி, முரளிக்கு பெரிய மார்க்கெட் தந்தது. இப்போது தான் ஒரு ட்விஸ்ட் வருகிறது. முன்பு விக்ரமன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது பாதியில் ட்ராப் ஆன பிரிவோம் சந்திப்போம் படம், முரளி மார்க்கெட் திரும்பியதால் மீண்டும் துவங்குகிறது. ஒரு போஷனுக்கு விக்ரமனே போய் டைரக்ட் செய்து தரும் அளவிற்கு புது வசந்தம், அதில் நடித்தவர்கள், இயக்கியவர், தயாரித்தவர் , இசையமைத்தவர் என ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் புதிய வசந்தத்தை தந்தது. இன்று டிவியில் அடிக்கடி புது வசந்தம் படத்தை பார்க்கும் போது, ஒரு ஹிட் படம் தானே என நாம் கடந்து போவோம். இனி அதை பார்க்கும் போது, அது உருவான வரலாற்றை கொஞ்சம் நினைவூட்டினால் புது வசந்தம் இன்னும் குளிரூட்டும்! 


மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க....


ப்ளாஷ்பேக்: சிவக்குமார்-ஸ்ரீகாந்த் வாய்ப்பை தட்டிப் பறித்த கமல்-ரஜினி: இப்படி தான் இளமை ஊஞ்சல் ஆடியது!


ப்ளாஷ்பேக்: தடுமாறிய விஜயசாந்தி... தத்தளித்த மணிவண்ணன்...ஈரத்தில் சிக்கிய கல்லுக்குள் ஈரம்!


ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... காமெடியன் கவுண்டமணி உருவான கதை!


ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!


பிளாஷ்பேக்: விஜயகாந்த்-ஆர்.கே.செல்வமணி லடாய்... ட்ராப்... ட்ராப்... ட்ராப்... புலன்விசாரணை பிறந்த கதை!