சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த், உலகநாயகனாக கமலஹாசன் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் அதற்கு முழு தகுதியானவர்களே. துவக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் அளவிற்கு நெருக்கமானவர்கள். பின்னாளில் அவர்கள் இணைந்து நடிக்கவில்லையே என்றாலும் நெருக்கத்தில் குறைவில்லை. ஆனால், அவர்களை ஆரம்பத்தில் இணைந்து நடிக்க வைத்ததிலும், தேர்வு செய்ததிலும் பலர் பின்னணியில் இருக்கிறார்கள். அவையெல்லாம் தற்செயலாக நடந்தவை என்றாலும், பின்னாளில் அது நினைவு கொள்ளும் அளவிற்கு சம்பவமாக இல்லாமல் சரித்திரமாக மாறியிருக்கிறது. எம்.ஜி.ஆர்.,-சிவாஜிகளை இயக்கிய ஸ்ரீதர் படத்தில் ரஜினி-கமல் இல்லை இல்லை.... கமல்-ரஜினி இணைந்து நடித்தது எப்படி? பின்னணியில் பெரிய சுவாரஸ்யம் மறைந்திருக்கிறது. இன்றைய ப்ளாஷ்பேக்கில் அதை பார்க்கலாம்...




இளமை ஊஞ்சல் ஆடுகிறது...!


வித்தியாசமான கதை களத்தோடு இரு நாயகர்களை வைத்து ஒரு படம் செய்ய முடிவு செய்கிறார் இயக்குனர் ஸ்ரீதர். நல்ல அனுபவசாலி, திறமையானவர் என்றாலும், தனது உதவி இயக்குனர்களின் ஆலோசனையை அவர் பெறத் தவறியதில்லை. இப்போது உதவி இயக்குனர்களாக அவரிடம் இருப்பவர்கள், புதுமுகங்களான சந்தானபாரதியும், பி.வாசுவும் தான். இருவருமே சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஸ்ரீதரிடம் வாய்ப்பை பெற்றிருந்தனர். வாய்ப்பை மட்டுமல்ல, இயக்குனரின் அன்பையும் பெற்றிருந்தனர். இப்போது அவர்களை அழைத்து ஆலோசிக்கிறார் ஸ்ரீதர். இருவருக்கும் ஒரே குஷி. 




சிவக்குமார்-ஸ்ரீகாந்த் தான் இயக்குனரின் சாய்ஸ்!


கதை மீதிருந்த ஆர்வத்தை விட, எந்த ஆர்டிஸ்டை போடப்போகிறார் என்கிற ஆர்வம் தான் சந்தானபாரதிக்கும், பி.வாசுவுக்கும். இப்போது கதையை கேட்கிறார்கள். கதை பிரமாதம் ரகம். இருவரும் இயக்குனர்களை புகழ்கிறார்கள். ‛ஆமாய்யா... நல்ல கதை ... சிவக்குமார்-ஸ்ரீகாந்த்தை வெச்சு ஆரம்பிச்சடலாம்...’ என ஸ்ரீதர் கூற, வாசுவுக்கும், சந்தானபாரதிக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை . ‛கதை ரொம்ப பிரமாதமா இருக்கு... நல்ல யூத்தா போடுவோமே...’ என்று கூறியுள்ளனர். ‛யூத்தா... அது யாரு யூத்...’ என கேட்கிறார் ஸ்ரீதர். ‛கமலஹாசன்னு ஒரு பையன்... இப்போது பின்னி எடுத்துட்டு இருக்கான்...’ என , தனது நண்பர் கமலை சிபாரிசு செய்கிறார் சந்தானபாரதி. ‛சார்... ரஜினினு ஒருத்தர்... புவனா ஒரு கேள்விக்குறியில் பின்னி எடுத்திருக்காரு’ அவரையும் போடலாம் என தன் விருப்பத்தை கூறியிருக்கிறார் பி.வாசு. ‛என்னது கமல்... ரஜினியா... யாருய்யா அவங்க...’ என அவர்களின் விருப்பத்தை நிராகரிப்பதற்கு முன்பே,அடுத்த குண்டை போட காத்திருந்தனர் இருவரும். 




எம்.எஸ்.வி., வேணாம்....!


‛சார்... மியூசிக் யாருன்னு....’ இருவரும் கேட்கிறார்கள். ‛இதில் என்ன சந்தேகம், எம்.எஸ்.வி., தான்...’ என கூலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். சார்... இளையராஜானு ஒருத்தர்... அன்னக்கிளியில பிச்சு எடுத்திருக்காரு. அவரை போட்டோம்னா படம் எங்கேயோ போயிடும் என... அவர்கள் கூற, இப்போது கடுப்பானார் இயக்குனர். ‛யோவ்... நானும் எம்.எஸ்.வி.,யும் கிட்டத்தட்ட 25... 30 வருச பழக்கம், அவரையே மாத்த சொல்றீங்களா...’ என கடுப்பானார் ஸ்ரீதார். ‛கருத்து கேட்டா ஓவரா போறீங்க... வெளியே போங்கடா...’ என இரண்டு பேரையும் வெளியேற்றினார். இருவருக்கும் பெரிய அளவில் வருத்தம். படம் நல்லா வரணும்னு தானே நாம ஐடியா கொடுத்தோம்... இப்படி ஆகிடுச்சேனு... வருத்தம். இனிமே டைரக்டர் கூப்டுவாரா... மாட்டாரானு பயம் வேற. நான்கு நாள் அந்த பக்கமே அவர்கள் போகவில்லை.




மனதை மாற்றிய வீட்டார்!


வீட்டுக்கு போன ஸ்ரீதர், குடும்பத்தாருடன் சாப்பிடும் போது, ரஜினி, கமல், இளையராஜா பற்றி கேட்டுள்ளார். மூவரும் தற்போது ட்ரெண்டில் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் கருத்து மூலம் அறிந்து கொண்டார். வாசும், சந்தானமும் நடைமுறையில் உள்ளதை கூறியிருக்கிறார் என்பதை அவர் புரிந்து கொண்டார். தனது கதைக்கு அவர்கள் மூவருமே பொருத்தமானவர்கள் என்பதை இப்போது முழுமையாக நம்புகிறார் ஸ்ரீதார். ஆனால் அவர்கள் மூவரையும் அவர் அதுவரை சந்தித்தது இல்லை. அதற்கான வாய்ப்பும் ஏற்பட்டதில்லை. அனுபவசாலியான அவர், புதுமுகங்களை தேடி போவாரா என்கிற பல கேள்வி உங்களுக்குள் இருக்கும். அதே தான் அனைவருக்கும் இருந்தது. 




வாசு,சந்தான பாரதியை அழைத்த ஸ்ரீதர்!


இயக்குனரிடம் திட்டு வாங்கி இன்றோடு 4வது நாள், அறையில் இருந்த வாசுவையும், சந்தானபாரதியையும் தேடி வருகிறார் ஸ்ரீதரின் உதவியாளர். ‛என்னப்பா இங்கே இருக்கீங்க... டைரக்டர் உங்களை வரச் சொல்றாரு...’ என, அவர் கூற, ‛அப்பாடா... டைரக்டருக்கு நம்ம மீது இருந்த கோபம் போயிடுச்சு...’ என உற்சாகமாக புறப்பட்டனர் இருவரும். இனி அவரிடம் செல்ல வாய்ப்பிருக்காது என்று எண்ணிய அவர்களுக்கு, அந்த அழைப்பு பெரிய மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அதை விட பெரிய மகிழ்ச்சி அங்கு காத்திருந்தது. காரில் இருந்து இறங்கியதுமே அவர்களுக்கு அதிர்ச்சி. கங்கை அமரன் கித்தாரோடு வாசலில் நிற்கிறார். இளையராஜா அன் கோ உடன் சந்தான பாரதிக்கு ஏற்கனவே நல்ல நட்பு இருந்தது. அவர்களை பரிந்துரைக்க அதுவும் ஒரு காரணமா இருந்தது. ‛என்ன பாரதி... லேட்ட வர்ற...’ என கங்கை அமரன் கேட்க, ‛நீ என்ன பண்ற...’ என பாரதி கேட்க, ‛கம்போசிங்டா... அண்ணேன் உள்ளே உட்கார்ந்திருக்காரு...’என, அமர் சொல்ல, இருவருக்கும் ஒரே மகிழ்ச்சி. 




இளையராஜா... கமல்... ரஜினி... எல்லோரும் வந்தாச்சு!


உள்ளே போய் பார்த்தால், கிட்டத்தட்ட 4 பாடல்கள் கம்போசிங் பண்ணி முடித்துவிட்டார்கள். அமர்ந்திருந்த ஸ்ரீதரை இருவரும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். ‛என்னய்யா... உங்க மியூசிக் டைரக்டர் வந்துட்டாரு... சந்தோசமா...’ என அவர் கேட்க, இருவர் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி. ‛சரி வாங்க போலாம்...’ அடுத்த அழைப்பு பாரதிக்கு இயக்குனரிடமிருந்து. ‛எங்கே சார்...’ என அவர் கேட்க, ‛கமல் உன் ப்ரெண்டாமே.... வா அவர் டேட் வாங்கிட்டு வந்திடலாம்...’என இயக்குனர் சொல்ல, சந்தானபாரதிக்கு கைகால் ஓடவில்லை. ரஜினி என்ன ஆனார் என வாசுவுக்கு ஏக்கம். ‛ரஜினியும் ஓகே தான்ய்யா...’ என ஸ்ரீதர் சொல்ல, பெரிதாய் சாதித்த திருப்தி அவர்களுக்கு. கமலுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்த சந்தானபாரதிக்கு சிறிது இடைவெளி விழுந்திருந்தது.


தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


அதனால் கமல் டேட் வாங்க நான் வரவில்லை என்று மறுத்துவிட்டார். ஸ்ரீதர் நேரடியாக சென்று அவரே டேட் வாங்கி கமல், ரஜினியை ஓகே செய்ததுடன், ஹீரோயின் சான்ஸையும் வாசு, சந்தானபாரதியிடமே விட்டிருந்தார். அதன் படி ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா என ஒட்டுமொத்த உதவி இயக்குனர்களின் சாய்ஸாக தான் உருவானது இளமை ஊஞ்சலாடுகிறது. 




இளைஞர்களால் இளமை ஊஞ்சலாடியது!


1978 ஜூன் 9ம் தேதி வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது படம், நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் பேய் ஹிட். கமல், ரஜினி கனவு நாயகனுக்கு தயாரானார்கள். இரு உதவி இயக்குனர்களின் சாய்ஸ், அன்று ஒரு படத்தை, அன்றைய கால கட்டத்திற்கான படமாக மாற்றியது. உதவி இயக்குனர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்த ஒரு இயக்குனரின் உயர் பண்பும், தன் கருத்தை துணிந்து சொன்ன உதவி இயக்குனர்களின் துணிவின் அடிப்படையில் வெளியானது தான் இளமை ஊஞ்சலாடுகிறது. தலைப்பில் மட்டுமல்ல நடிகர் தேர்விலும் இளமை ஊஞ்சலாடியதால் அதை அனைவரும் ஏற்றனர். கொண்டாடினர். வெறுமனே கமலும் ரஜினியும் இணைந்து நடித்த படம் என்று தான் நாம் அந்த படத்தை கடந்து போவோம். ஆனால், அவர்கள் இணைந்து நடித்ததில் இந்த பின்னணி இருந்தது. அது தான் அவர்களை இணைத்தது.


மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க....


ப்ளாஷ்பேக்: தடுமாறிய விஜயசாந்தி... தத்தளித்த மணிவண்ணன்...ஈரத்தில் சிக்கிய கல்லுக்குள் ஈரம்!


ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... காமெடியன் கவுண்டமணி உருவான கதை!


ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!


பிளாஷ்பேக்: விஜயகாந்த்-ஆர்.கே.செல்வமணி லடாய்... ட்ராப்... ட்ராப்... ட்ராப்... புலன்விசாரணை பிறந்த கதை!