Violence Against Children: நோ சொல்லு... சத்தம் முக்கியம் - குழந்தைகளுக்கு இதை சொல்லிக்கொடுங்க முதல்ல! மற்றது அப்புறம்தான்
உங்கள் உடல் உங்களுக்கு மட்டுமே சொந்தம். அதை எந்த வழியிலும் தொடவோ, காயப்படுத்தவோ அனுமதி இல்லை.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 18 முதல் 24ஆம் தேதி வரை விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதை முன்னிட்டு, தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறை குழந்தைகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன்படி, குழந்தைகள் நோ சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கியவர்களால்தான் அதிக பாதிப்பு
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் பெற்றோர், மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா என நெருங்கிய உறவினர், அக்கம்பக்கத்தினர், ஆசிரியர், பயிற்சியாளர், பராமரிப்பாளர் என தெரிந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் என்பது இதற்கு முன் பதிவான வழக்குகள் மூலம் தெரியவரும் உண்மை.
குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய தொடுதல் விதிகள்!
* உங்கள் உதடுகள், மார்பகம், கால்களுக்கு இடையே மற்றும் பின்புறம் என உடற்பகுதிகளை யாரும் தொட அனுமதிக்காதீர்கள். அதே போல் நீங்களும் மற்றவரின் அந்தரங்க உடற்பகுதிகளை தொடக்கூடாது.
* யாராவது அந்தரங்க உடற்பகுதிகளை தொட முயற்சி செய்தால் சத்தமாக வேண்டாம் என்று சொல்லுங்கள்.
* உங்கள் அந்தரங்க உடற்பகுதிகளை புகைப்படம் எடுக்க யாரையும் அனுமதிக்காதீர்கள்.
உங்கள் உடலுக்கு நீங்கதான் பாஸ்!
* உங்களுக்கு யார் முத்தம் கொடுக்கலாம், யார் கட்டி அணைக்கலாம் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
* நீங்கள் பாதுகாப்பில்லாத தொடுதலை உணரும்போது அதை மறைக்காமல் உடனே பெற்றோரிடம் சொல்ல வேண்டும்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சிலர் பரிசு, இனிப்பு, பணம் கொடுத்து அவர்கள் சொல்லும்படி நடக்கச் சொல்வார்கள். அப்போது நீங்கள் பாதுகாப்பாக இல்லாததுபோல் உணர்ந்தால், அவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டாம், பரிசையும் வாங்க வேண்டாம்.
என்ன செய்ய வேண்டும்?
* யாராவது உங்களிடம் தொடுதல் விதிகளை மீறினால், வேண்டாம் என்றோ, நோ என்றோ சத்தம் போட்டு தைரியமாகச் சொல்லத் தயங்காதீர்கள்.
* அந்தரங்க உடற்பகுதிகளை புகைப்படம் எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் தவிர்த்து, மற்ற காரணங்களுக்காக பிறர் தொடவோ, பார்க்கவோ அனுமதிக்க வேண்டாம்.
* உங்கள் உடல் உங்களுக்கு மட்டுமே சொந்தம். அதை எந்த வழியிலும் தொடவோ, காயப்படுத்தவோ அனுமதி இல்லை.
அங்கிருந்து ஓடுங்கள்
உங்களை யாராவது துன்புறுத்தினாலோ, பிடிக்காததைச் செய்யச்சொல்லி வற்புறுத்தினாலோ, வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து ஓட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளுக்குமே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படலாம். பாலினம், வயது, இனம், பின்னணி, சமூக-பொருளாதார நிலை, குடும்ப அமைப்பு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் குழந்தைகள் சொல்வதை கவனிக்க வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.
உதவி எண்கள் இதோ!
இவை அனைத்தையும் தாண்டி குழந்தைகள் ஏதேனும் வன்முறையை எதிர்கொண்டால், பள்ளிக் கல்வித்துறையின் மாணவர் உதவி எண் 14417 அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 அறிவிக்கப்பட்டுள்ளது.