TNPSC Group 1 Result: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; நேர்காணல் நடந்த அன்றே குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
TNPSC Group 1 Exam Results 2025: ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய நேர்காணல் இன்று வரை நடந்த நிலையில், இன்றே குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் இன்று (ஏப்ரல் 9) நடந்த நிலையில், இன்றே மதிப்பெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
முன்னதாக குரூப் 1 முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், நேர்காணல் தேர்வு ஏப்ரல் 7 முதல் 9ஆம் தேதி (இன்று) வரை நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி நடத்தப்படும் தேர்வுகளிலேயே மதிப்பு மிக்கதும் அதிக ஊதியம் அளிக்கக்கூடியதுமான குரூப் 1 தேர்வை, யுபிஎஸ்சி தேர்வர்களும் எழுதுவர். துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித் துறை), துணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
1.60 லட்சம் பேரில் 1888 பேர் தேர்வு
இந்தத் தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர். அவர்களில் 1,888 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
நேர்காணல் நடந்த நாளிலேயே தேர்வு முடிவுகள்
இதில் இருந்து தேர்வான நபர்களுக்கு, நேர்காணல் தேர்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. குறிப்பாக ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய நேர்காணல் இன்று வரை நடந்த நிலையில், இன்றே குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் இது இறுதிப் பட்டியல் அல்ல. இதில் தேர்வான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அதன் பிறகே இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/CML_GROUP_I_04_2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வான நபர்களின் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

