TNGASA 2025: மறந்துடாதீங்க மாணவர்களே.. நாளைதான் கடைசி; அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வது எப்படி?
TNGASA Admission 2025: கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க நாளை (மே 27) கடைசித் தேதி ஆகும்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க நாளை (மே 27) கடைசித் தேதி ஆகும். மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன.
இவற்றில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க நாளை (மே 27) கடைசித் தேதி ஆகும். எனினும் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் தேர்வர் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- அதில் லாகின் செய்து, சுய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- சிறப்பு ஒதுக்கீட்டு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- தேவையான விவரங்களை உள்ளிட்டு, சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
- சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம், பதிவுக் கட்டணம் செலுத்துவது எப்படி?
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில், “The Director, Directorate of Collegiate Education, Chennai - 15” என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
தொடர்பு எண்கள்: 044 - 24343106, 044 - 24342911
இ மெயில் முகவரி: tngasa2025@gmail.com
மாணவர்கள் https://static.tneaonline.org/docs/arts/tngasa_booklet.pdf?t=1748236555736 என்ற இணைப்பில் விண்ணப்பிப்பது குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய முழு கையேட்டையும் பெற்றுக்கொள்ளலாம்.





















