Law University: சட்டப் படிப்புக்காக பல்கலைக்கழகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டப் படிப்புக்காக பல்கலைக்கழகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சட்டப் படிப்புக்காக பல்கலைக்கழகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 20ஆம் தேதி) பங்கேற்றார். விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், வெள்ளி விழா கல்வெட்டினைத் திறந்து வைத்தார். அதேபோல வெள்ளி விழா சிறப்பு மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
வெள்ளி விழாவில் முதல்வர் பேசியதாவது:
''1997ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிக்க பல்கலை.தான் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்.
இந்த பல்கலைக்கழகத்தைத் தொடங்கிய கருணாநிதியின் மகனாகிய நான், சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்.
சட்டப் படிப்புக்காகப் பல்கலைக்கழகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். சமூக நீதியின் அடிப்படையில் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடந்து வருவது மகிழ்ச்சி அடைய வைக்கிறது. மாணவர்கள், அரசியலமைப்பு சாசனத்தின்படி அடிப்படை உரிமைகளைக் காத்திட தங்களின் சட்ட அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
அம்பேத்கர் பெயருக்கு மகாராஷ்டிராவிலேயே எதிர்ப்பு
அண்ணல் அம்பேத்கரின் பெயரை மரத்வாடா, அதாவது மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்கக் கருணாநிதி அன்றைக்கு முயற்சியை மேற்கொண்டார். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சிலர் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தது மட்டுமல்ல, வன்முறையில்கூட ஈடுபட்டார்கள். அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்திலே இந்த நிலைமை இருந்தது.
தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்ப வேண்டும் என்று நம்முடைய முதல்வராக இருந்த கருணாநிதி, அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். கோடிக்கணக்கான தந்திகள் பறந்தன. அவருடைய கட்டளையை ஏற்று, அத்தனை பேரும் தந்தி அனுப்பி வைத்தார்கள். அந்த மாநில ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் , அப்பொழுது முதல்வர் பொறுப்பில் இருந்த சரத்பவாரும் அந்தத் தந்திகளையெல்லாம் பார்த்ததற்குப் பிறகு, தலைவர் கலைஞருக்கு ஒரு பதில் அனுப்பினார்கள். என்ன பதில் என்றால், நீங்கள் நினைப்பதைப்போல நிச்சயமாக அம்பேத்கர் பெயரை நாங்கள் சூட்டுவோம் என்று அறிவித்தார்கள்.
1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக் கல்லூரிக்கு, 'டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று பெயர் சூட்டியவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் . 1997-ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளிவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
இன்னொரு முக்கியமான செய்தியை உங்களிடத்தில் நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தேவையான இடத்தைத் தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்தது, அப்போது நடந்த நிகழ்வை, நான் இங்கு உங்கள் அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கருணாநிதியின் இல்லம் கோபாலபுரத்தில் இருக்கிறது. முதல்வராக இருந்தபோது அந்த இல்லத்தில்தான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த கோபாலபுரம் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்தத் தெருவில் நான்கைந்து கார்கள்கூட நிற்க இடம் இருக்காது, ஏனென்றால், அது நெருக்கமான இடம், போக்குவரத்துக்கு இடையூறாகிவிடும்.
அப்படிப்பட்ட முதல்வராக இருக்கக்கூடிய கலைஞருக்கு, வசதியாக இல்லம் இருக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளெல்லாம் முடிவு செய்து, அரசின் சார்பில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூம்பொழில் இல்லத்தில் பல வசதிகளெல்லாம் செய்து அந்த இடத்தை முதல்வராக இருக்கும் கலைஞருக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். கலைஞரிடத்தில் சென்று இந்த ஆலோசனையைச் சொன்னார்கள். அந்தக் காலக்கட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இடம் தேடப்பட்டு வந்தது.
தான் குடியேற இருந்த இல்லத்தை பல்கலைக்கழகத்துக்காக ஒதுக்கினார்
உடனடியாக பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலை. அதற்கு உடனடியாக கட்டடம் கட்டுவது என்றால் காலம் ஆகும், நேரமாகும், காலம் விரயம் ஆகும். எனவே, கலைஞர் உடனே ஒரு அறிவிப்பு செய்தார். தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து, அன்றைக்கு உத்தரவிட்டவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். தன்னலம் கருதாது பொதுநல நோக்கில் பல்கலைக்கழகம் தொடங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர்.
2008-ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் சட்டப் பல்கலைக்கழக விரிவாக்கப் பணிகளுக்கென 15 ஏக்கர் நிலப்பரப்பினை பெருங்குடி பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்திற்கு அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2009-ஆம் ஆண்டிலும் தாம்பரம் பகுதியில் சட்டக் கல்வி வளர்ச்சிக்கென 2 ஏக்கர் நிலம் இப்பல்கலைக்கழகத்திற்கென முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் வழங்கப்பட்டது. இப்படி இதனை உருவாக்கியது முதல் சிறிது சிறிதாக வளர்த்தவர் முதல்வராக இருந்த கலைஞர் .
40 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தற்போது ஏறக்குறைய 4500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது. தற்போது 11 முதுநிலைப் பிரிவுகளும் 5 இளங்கலைப் பிரிவுகளும் இருக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பினை படித்து வருகிறார்கள்.
சமூகநீதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை
இந்தப் பல்கலைக்கழகம் அரசினுடைய சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள்வது உள்ளபடியே நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு சட்டக்கல்லூரிகளின் மூலமாக இந்தியாவிலேயே மிகச் சீரிய முறையில் சட்டக்கல்வியைக் கிராமப்புற மாணவர்களுக்கும் எளிதில் சென்றடைந்திடும் வகையில் சுமார் இருபதாயிரம் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறது.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் 70 விழுக்காட்டிற்கு மேல் மாணவிகளே சட்டம் பயின்று வருவதும், பல மாணவிகள் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் நிர்வாகப் பொறுப்புகளில் துணை நின்று பணியாற்றுவதும் நீதிபதிகளாக நீதி வழங்கி வருவதும் இந்தப் பல்கலைக்கழகம் பெருமிதம் அடையும் தருணமாக நான் இந்த நாளைப் பார்க்கிறேன்.
கடந்த 6.09.2021 அன்று 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூடுதல் இளங்கலைக் கல்வி வளாகத்தை காணொளி காட்சியின் மூலமாக நான் திறந்து வைத்தேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மென்மேலும் பொலிவுற்று பல சட்ட மாமேதைகளை உருவாக்கி சமூகத்திற்கு நன்மக்களை வழங்கக்கூடிய நற்பணியில் பல நூற்றாண்டுகள் சிறந்து செயல்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய - ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.