ஏமாற்றம், விரக்தி.. இந்த அரசும் எங்களை கைவிட்டு விட்டதா? பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை, இந்த நிதிநிலை அறிக்கையிலும் சட்டப்பேரவை அறிவிப்பிலும் நிறைவேற்றப்படாதது மிகுந்த விரக்தியையும் ஆழ்ந்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வி அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வேதனை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை நேற்று சட்டசபையில் வாசிக்கப்பட்டது. இதில், பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்த கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
’’முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசின் ஆட்சியில், தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் குறைந்த ஊதியத்தில் மாணவர்களின் நலன் கருதி பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை, இந்த நிதிநிலை அறிக்கையிலும் சட்டப்பேரவை அறிவிப்பிலும் நிறைவேற்றப்படாதது மிகுந்த விரக்தியையும் ஆழ்ந்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒத்திவைக்கப்படும் கோரிக்கை
இந்நிலையில் மே மாத சம்பளம், ஓய்வு பெறும் வயதை 57 ல் இருந்து 60 ஆக்கியது மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இவையெல்லாம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டவை. இதை இந்த அரசின் அறிவிப்பு போல் அமைச்சர் சொல்வதைப் பார்க்கும் போது இப்போதும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவே தெரிகிறது.
“தமிழக வெற்றிக் கழகம் (TVK) தேர்தல் அறிக்கையில் ஐந்தாண்டுகள் தற்காலிகமாகப் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்வோம்” என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான தெளிவான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்களின் நம்பிக்கை இன்னும் நிறைவேறவில்லை. அமைச்சர் அறிவிப்பு மேலும் ஏமாற்றத்தை அதிகரித்துள்ளது.
உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களில் பணியாற்றும் சுமார் 11,733 கொண்டு, பகுதிநேர ஆசிரியர்களின் அனுபவத்தையும் நீண்ட சேவையையும் கருத்தில் புதிய நியமனங்களுக்கு முன்பாக அவர்களை நிரந்தரப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அரசும் எங்களை கைவிட்டு விட்டதா?
மேலும் 3500 க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் நிலையில் காலியாக உள்ள 2,700 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அறிவித்திருப்பது இந்த அரசும் எங்களை கை விட்டு விட்டதோ என்ற அச்சத்தை தருகின்றது.
மாணவர்களின் முழுமையான கல்வி வளர்ச்சிக்காக இத்தகைய நீண்டகால சேவையாற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















