கலைஞர் பெயரில் Ph.D ஆராய்ச்சி உதவித்தொகை.. லண்டன் பல்கலை.,யில் சபரீசன் தொடங்கிய சூப்பர் திட்டம்!
. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகளான செந்தாமரை ஸ்டாலினும், சபரிசனும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நன்கொடையாளர்கள் சங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் வழியாக கருணாநிதி பெயரில் முனைவர் பட்ட மாணவர் உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பெயரில் முனைவர் பட்ட மாணவர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொழிலதிபரும், திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகனுமான சபரீசன் தொடங்கியுள்ளார்.
திராவிட இயக்கத்தை கொண்டு செல்ல திட்டம்
திராவிட வரலாறு, அரசியல் மற்றும் சமூகம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அம்பேத்கர் - கலைஞர் கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்கனவே லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தில் தொழிலதிபர் சபரிசன் வேதாமூர்த்தி தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பெயரில் முனைவர் பட்ட மாணவர் உதவித்தொகை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் 1.3 மில்லியன் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13கோடிக்கும் மேல்) நிதியுதவியாக வழங்கியுள்ளார். ஒரு மாணவர் 3 ஆண்டுகள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள தேவையான நிதி இதன்மூலம் வழங்கப்படுகிறது. மேலும் திராவிட இயக்கம் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சித் திட்டத்திற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகளான செந்தாமரை ஸ்டாலினும், சபரிசனும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கல்விப்பணியை ஊக்குவிக்கும் நன்கொடையாளர்கள் சங்கத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அம்பேத்கர்–கலைஞர் ஆய்வு உதவித்தொகை
இதற்கிடையே லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அம்பேத்கர்–கலைஞர் கல்வி உதவித்தொகையின் முதல் பயனாளியான பகவநிதியை சபரிசன் சந்தித்துப் பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், புதலூர் அருகே உள்ள செங்கிப்பட்டியைச் சேர்ந்த பகவநிதி, 'ஆணையை மீட்டெடுத்தல்: சிறப்புக்கூறு திட்டத்திலிருந்து பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான உரிமை அடிப்படையிலான மேம்பாட்டுக் கட்டமைப்பு வரை' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பித்த 88 மாணவர்களில் இவரும் ஒருவர்.
சபரீசன் வழங்கும் இந்த கல்வி உதவித்தொகை தனது நிதிச் சுமையைக் குறைத்து, படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த உதவியதாக பகவநிதி தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆய்வின் ஒரு பகுதியாக 2025–26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டையும் ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மாத ஆய்வு உதவித்தொகை தனது அடுத்தகட்ட கல்விப் பயணத்திற்குத் தயாராக உதவியுள்ளதாகவும், எதிர்காலத்தில் முனைவர் பட்டம் பெற்று பல்கலைக்கழக ஆசிரியராகப் பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வுகளை உலகளவில் கொண்டு செல்லத் திட்டம்
இந்த நிலையில் திராவிட இயக்கம், சமூக நீதி மற்றும் தமிழக அரசியல் தொடர்பான ஆய்வுகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தைச் சபரீசன் வலியுறுத்தியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இந்தப் புதிய நிதியுதவித் திட்டம் திராவிட இயக்கத்தின் வரலாறு, சமூக நீதி கொள்கைகள் மற்றும் தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி குறித்து சர்வதேச அளவில் கல்விசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















