New Education Rules: புதிய கல்வி விதிகளில் இந்தியக் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் - கல்வி அமைச்சகம் வெளியிட்ட சாராம்சங்கள்!
தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட குழு, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை ((National Curriculum Framework - NCF) புதிதாக தயாரித்தது.
இந்தியக் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, திறன் அடிப்படையில் புதிய கல்வி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிய இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட குழு, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை ((National Curriculum Framework - NCF) புதிதாக தயாரித்தது. இந்த கட்டமைப்பு குறித்த ஆவணத்தை மத்தியக் கல்வி அமைச்சகம் நேற்று (ஆக.23) வெளியிட்டது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட ஆவணத்தில்,
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பில், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு, விரும்பிய பாடங்களை மாணவர்களே தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
4 படிநிலைகளில் விதிகள்
ஏற்கெனவே தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டபடி, பள்ளி பாடத்திட்டம் 4 படிநிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. அடித்தள நிலை, ஆயத்த நிலை, நடுநிலைப் பள்ளி நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை (Foundation, preparatory, middle and secondary) ஆகிய 4 படிநிலைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
* அடித்தள நிலை (3- 8 வயது): வேகமான மூளை வளர்ச்சி இருக்கும் இந்த நிலையில், விளையாட்டு, கண்டறிசெயல் மூலம் கற்றல் நிகழும். ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் புத்தகங்க கொடுக்க தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு பரிந்துரை செய்கிறது. 2ஆம் வகுப்பு வரை அடித்தள நிலை இருக்கும்.
* ஆயத்த நிலை (8- 11 வயது): விளையாட்டு, கண்டறி செயல் மூலம் உருவாக்குதல், அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட கற்றலுக்கு மாறத் தொடங்குதல். இந்த மாணவர்களுக்கு கணிதத்தோடு 3 மொழிகள் கற்பிக்கப்படும். செயல்வழி மற்றும் கண்டுபிடித்தல் அடிப்படையில் கற்பித்தல் நடக்கும்.
* நடுநிலைப் பள்ளி நிலை (11- 14 வயது): பாடங்களில் கருத்துருகளைக் கற்றல், வளரிளம் பருவத்தினரை வழிகாட்டத் தொடங்குதல். 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்து கற்பிக்கப்படும்.
* மேல்நிலைப் பள்ளி நிலை (14- 18 வயது): வாழ்க்கைக்கும் உயர் கல்விக்கும் ஆயத்தமாதல், இளம் வயது வந்தோர் நிலைக்கு மாற்றம். 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த நிலையில் இருப்பார்கள். மாணவர்கள் பகுத்தறிவு மற்றும் தர்க்கம் சார்ந்த திறன்களை வளர்க்க இந்த நிலை உதவும். கற்றலில் இலகுத் தன்மையை உருவாக்க, பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் முறை (Choice-based courses) அளிக்கப்படும்.
இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் கல்வி
தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு இந்தியாவின் பழங்காலப் பண்பாடுகளை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளது. மொழி, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், நிபுணர்கள் என உள்ளூர் வளங்களை பள்ளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் சாதித்த இந்தியர்கள் குறித்து கற்பிக்கப்படும்.
பொதுத் தேர்வுகள், மாதக்கணக்கிலான பயிற்சி மற்றும் மனப்பாடம் தவிர்த்து புரிதல் மற்றும் திறனின் அடிப்படையிலேயே அமையும்.
எந்த வாரியத்துக்கெல்லாம் பொருந்தும்?
புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும். அதேபோல சர்வதேச பாடத்திட்டமான ஐசிஎஸ்சிஇ, ஐஎஸ்சி ஆகியவையும் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பைப் பின்பற்றும் என்று தெரிவித்து இருந்தது. விருப்பமுள்ள மாநிலக்கல்வி வாரியங்களும் இதைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.