MBBS Seats: தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி: 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடம்- விதியை திரும்பப் பெற்ற தேசிய மருத்துவ ஆணையம்
சுமார் 7.68 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 7,686 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டும்தான் அதிக அளவாக இருக்க முடியும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் 10 லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி புதிய அறிவிக்கையை வெளியிட்டது.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குதல், புதிய மருத்துவ படிப்புகளை ஆரம்பித்தல், ஏற்கெனவே இருக்கும் படிப்புகளில் மருத்துவ இடங்களை அதிகரித்தல், மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கான அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
தேசிய மருத்துவ ஆணையின் அறிக்கையை முழுமையாக வாசிக்க: https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/18-8-2023.pdf
தமிழ்நாட்டுக்கு பாதிப்பு
இதன்மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று விமர்சனங்கள் எழுந்தன. புதிய விதிப்படி சுமார் 7.68 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 7,686 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டும்தான் அதிக அளவாக இருக்க முடியும். ஆனால், அதை விட அதிகமாக தற்போதே 11,225 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.இதனால், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களையும் உருவாக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
நாட்டில் இருப்பதிலேயே அதிகபட்சமாக புதுச்சேரியில் பத்து லட்சம் பேருக்கு 1,329 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல 10 லட்சம் பேருக்கு அதிகமாக மருத்துவ இடங்கள் உள்ள மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், கோவா, சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது.
இதையத்து மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். இந்த நிலையில், புதிய விதியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றிருக்கிறது. எனினும் இந்த விதி ஓராண்டுக்குப் பிறகு, 2025- 26 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுடன் கலந்தாய்வு நடத்தி, 2025-26 ஆம் ஆண்டு முதல் தடையை செயல்படுத்த ஆணையம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக வாசிக்க: https://www.nmc.org.in/MCIRest/open/getDocument?path=/Documents/Public/Portal/LatestNews/PN%2010%20lac%20100%20seat.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டிருப்பது, தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் நிரந்தரமாக புதிய விதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைக் குரல்கள் எழுந்துள்ளன.
புதிய மருத்துவக் கல்லூரிகள்
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாகவே அங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உருவாகியுள்ளன. அதற்காக அந்த மாநில அரசுகளை மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு அதிக அளவாக 100 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற ஆணைக்கு ஓராண்டுக்கு மட்டுமின்றி நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் அமைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.