Kalai Thiruvizha: கலைத் திருவிழா மாநிலப் போட்டிகள்; வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி விருதுகள், வெளிநாட்டுச் சுற்றுலா
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதேபோல முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனைக் கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி அளவிலான போட்டிகள்
முதற்கட்டமாக பள்ளி அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலப் போட்டி இன்று (டிசம்பர் 27) முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. அத்துடன் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்பட உள்ளதாகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வகுப்பு வாரியாக மாநிலப் போட்டிகள்
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அளவிலான அனைத்து வகைப் போட்டிகளும் மதுரை மாவட்டத்தில் நடைபெறுகின்றன. 9, 10 வகுப்புகளுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்திலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன. ஒரு மாவட்டத்தில் 5 முதல் 6 இடங்களில் பிரிவு வாரியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் காண்கலை, நுண்கலை, நாடகம், மொழி திறன் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இசை, வாய்ப் பாட்டு, கருவி இசை - தோல் கருவி, கருவி இசை - துளை, காற்றுக் கருவி, கருவி இசை - தந்திக் கருவி, இசைச் சங்கமம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடனப் போட்டி நடைபெற உள்ளது.
15 குழுக்கள் அமைப்பு
மாநில அளவிலான கலை திருவிழா போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, இட வசதி, உணவு, மாணவர் பாதுகாப்பு, ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.