Keerthy Suresh: ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்ட ‘கீர்த்தி சுரேஷ்’; லட்சங்களை தூக்கிக்கொடுத்த இன்ஜினியர்; கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!
பொதுவாக பிரபலமாக இருக்கும் நபர்களின் பெயர்களில் பல சமூக வலைத்தளக் கணக்குகள் போலியாக தொடங்கப்பட்டு சக பிரபலங்களை விமர்சிப்பது, பணம் கேட்பது என மோசடி சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம்.
நடிகை கீர்த்தி சுரேஷின் படத்தை தவறாக பயன்படுத்தி ரூ.41 லட்சம் வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பிரபலமாக இருக்கும் நபர்களின் பெயர்களில் பல சமூக வலைத்தளக் கணக்குகள் போலியாக தொடங்கப்பட்டு சக பிரபலங்களை விமர்சிப்பது, பணம் கேட்பது என மோசடி சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம். இதனை தடுக்க எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்பம் காரணமாக மோசடிகளும் அதிகரித்து தான் வருகின்றது. அப்படியான சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் பரமேஸ்வர் ஹிப்பர்கி என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் அடங்கிய பேஸ்புக் கணக்கில் இருந்து friend request மெசெஜ் வந்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட பரமேஸ்வரிடம் தான் நடித்த படங்கள் குறித்து கருத்து கேட்பது போல தொடங்கிய பேச்சுவார்த்தை நீண்ட உரையாடலாக தொடர்ந்துள்ளது.
இதன் விளைவாக எதிர்முனையில் பேசிய நபர் காதல் வார்த்தைகளை வீச, பரமேஸ்வரும் அதனை உண்மை என நம்பினார். ஒரு கட்டத்தில் சந்தேகம் வர புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அக்கவுண்டில் இருந்து பரமேஸ்வர் கேட்ட புகைப்படங்களை தாண்டி அந்தரங்க புகைப்படங்களும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. போனில் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் பெண் ஒருவர் பேசியதால் கீர்த்தி சுரேஷ் என்ற முழுவதுமாக பரமேஸ்வர் நம்ப தொடங்கினார்.
மேலும் தனக்கு சினிமாவில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. ஐஏஎஸ் படிக்க விருப்பம். ஆனால் ரூ.10 லட்சம் பணம் தந்தால் கலெக்டர் ஆகி திருமணம் செய்து கொள்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார். முதற்கட்டமாக நேரில் சந்திக்கலாம் என சொன்னதை நம்பி ரூ.10 லட்சம் பரமேஸ்வர் அனுப்பியுள்ளார். அதேசமயம் வழக்கம்போல அந்தரங்க புகைப்படங்கள் தனக்கு வருவதைப் பார்த்து தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மீண்டும் பணம் கேட்டு மெசெஜ் வர, தன்னை நேரில் சந்திக்காவிட்டால் பணம் கொடுக்க முடியாது என பரமேஸ்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த முகநூல் கணக்கு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரமேஸ்வருக்கு திரும்ப அனுப்பப்பட்டு, கேட்கும் பணத்தை தராவிட்டால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அவர் இருப்பதை எல்லாம் விற்று ரூ.41 லட்சம் வரை கீர்த்தி சுரேஷ் எனப்படும் முகநூல் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாத நிலையில் சிந்தகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுதொடர்பாக உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தது. கீர்த்தி சுரேஷ் பெயரில் பேசியது தாசரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா என தெரிய வந்தது,
சிறு வாடகை வீட்டில் வசித்து வரும் அவர், பரமேஸ்வர் அனுப்பிய பணத்தில் நகை, கார், பைக் என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மஞ்சுளா செய்த இந்த குற்றச் செயலில் அவரது கணவருக்கு பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு வீட்டையும் மஞ்சுளா கட்டி வந்துள்ளார். அவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், தலைமறைவான கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.