ஒரு பேனர்... ஒரு நொடியில் விபரீதம்! விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
விழுப்புரத்தில் பிறந்தநாள் விழாவிற்காக பேனர் வைக்க முயன்றபோது, உயர் மின்னழுத்த மின்கம்பியில் பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் வைக்கச் சென்றபோது, ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றபோது, அது உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் விழாவுக்காக பேனர்
விழுப்புரம் நகரப் பகுதியான ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த கரன் என்பவரின் மகன் மித்தரனுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி கே.கே. சாலையில் உள்ள மண்டபத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக கே.கே. சாலையில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மதன்குமார் (28), கரன், பூவரசன், வாஞ்சிநாதன் ஆகிய 4 பேர் பேனர் வைப்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பேனரை அகற்றியபோது விபத்து
அவர்கள் பேனர் வைக்க சென்ற இடத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஏற்கனவே பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பிறந்தநாள் பேனரை வைப்பதற்காக அந்த பேனரை அகற்றும் பணியில் 4 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேனரை அவிழ்த்து எடுத்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பேனர் அருகில் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் திடீரென பேனரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் மதன்குமார் உள்ளிட்ட 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி
இந்த விபத்தில் மதன்குமார் (28) மீது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
மேலும் கரன், பூவரசன், வாஞ்சிநாதன் ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த மதன்குமாரின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டிருந்ததா, மின்கம்பிக்கு அருகில் பேனர் அமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் வைக்கச் சென்றபோது, ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















