விழுப்புரத்தில் பயங்கரம்.. நண்பனை அடித்து கொன்ற சக நண்பன் - காரணம் என்ன?
பேனரில் பெயர் போட்டதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே மது போதையில் சக நண்பனை இரும்பு ராடால் தலையில் அடித்து கொன்றனர்.

விழுப்புரம்: வளவனூர் அருகேயுள்ள ராம்பாக்கத்தில் பேனரில் பெயர் போட்டதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே மது போதையில் சக நண்பனை இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பேனரில் பெயர் போட்டதில் ஏற்பட்ட தகராறு - நண்பரை அடித்து கொலை செய்த சக நண்பர்கள்
விழுப்புரம் மாவட்டம் வளவனுார் அருகேயுள்ள ராம்பாக்கம் காலனி பகுதியை சார்ந்த எலக்ட்ரிசியன் ரஞ்சித்குமார், தனது நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் அடித்து வைத்துள்ளனர். இதில் மதன்குமார் என்ற நண்பரின் பெயரை ரஞ்சித்குமார் அவரிடம் கேட்காமல் பேனரில் போட்டுள்ளார். இதனை அறிந்த மதன்குமார் ரஞ்சித்திடம் என் பெயரை பேனரில் போடுவதற்கு தன்னிடம் ஒப்புதல் வாங்காமல் ஏன் போட்டாய் என கேட்டு பேனரை மதன்குமார் கிழித்துள்ளார். இதனால் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஏரிக்கரைக்கு வரவைத்து கொலை
சண்டையில் மதன்குமார் தனது நண்பர்களுடன் சொரப்பூர் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது ரஞ்சித்குமாரை வரவழைத்து அடிக்க திட்டமிட்டு, ரஞ்சித்தினை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். ரஞ்சித்குமார் தனது இரு நண்பர்களுடன் சொரப்பூர் ஏரிக்கரை பகுதிக்கு சென்றபோது மதன்குமார் ஆறு நண்பர்களுடன் இணைந்து மது போதையில் இரும்பு ராடால் ரஞ்சித்குமார் மற்றும் உடன் சென்ற நண்பர்களை தாக்கியுள்ளனர். இந்த இரண்டு நண்பர்கள் தப்பித்து வந்து ரஞ்சித்குமாரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது ரஞ்சித்குமார் ரத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வளவனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கில் குற்றவாளிகளான மதன்குமார், சுரேஷ்குமார், ஹரிஷ்குமார், தரணிதரன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்ய வலியுறுத்தி இறந்த ரஞ்சித்குமாரின் உறவினர்கள் ராம்பக்கத்தில் பட்டாம்பாக்கம், வளவனூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரனமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வளவனூர் போலீசார் சமாதானம் செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். பேனரில் பெயர் போட்டதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே மது போதையில் சக நண்பனை ராடால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.





















