Crime: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி
விழுப்புரம்: விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தாலுகா பூவனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனியன் மகன் கோவிந்தராஜ் (வயது 30), கூலித்தொழிலாளி. வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அந்த பெண், சாலை விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16.9.2019 அன்று அந்த பெண்ணின் கணவர், வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தார். அவரது குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் அப்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவர் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மாலை அவரது வீட்டிற்குள் கோவிந்தராஜ் அத்துமீறி நுழைந்து கதவை உட்புறமாக தாழிட்டார்.
பாலியல் வன்கொடுமை:
பின்னர் அந்த பெண்ணின் கையை கயிறால் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். இதனிடையே பள்ளி முடிந்து அப்பெண்ணின் குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அந்த வீட்டிற்குள் கோவிந்தராஜ் இருப்பதை பார்த்து கூச்சலிட்டு அழுதனர். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து ஓடிவந்தனர். அதற்குள் கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரது வீட்டிற்கு சென்று அப்பெண்ணின் குடும்பத்தினர் நியாயம் கேட்டபோது அவர்களை கோவிந்தராஜ், அவரது தந்தை முனியன் (58) ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
10 ஆண்டு சிறைத்தண்டனை:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ், முனியன் ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், முனியனை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கோவிந்தராஜ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்