செங்கல் சூளையில் புகையால் மூச்சு திணறி கணவன், மனைவி உயிரிழப்பு - வேலூர் அருகே சோகம்
வேலூர் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு கணவன் மனைவி உயிரிழப்பு. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்( Vellore News): வேலூர் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு கணவன் மனைவி உயிரிழந்தனர். முறையாக உரிமம் பெற்று செயல்பட்டதா என வருவாய்த்துறை விசாரணை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வேலூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி வயது (40), இவருடைய மனைவி அமுல் வயது (30) இந்த தம்பதியினருக்கு சந்தியா, சினேகா, அரவிந் என இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செங்கல் சூளை வைத்து நடத்தி வருகின்றனர்.
மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையை பற்ற வைத்து விட்டு வெளியில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் திடீரென கனமழை பெய்ததால் செங்கல் சூலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு உள்ளே தெய்வ சிகாமணி அவருடைய மனைவி அமுல் ஆகிய இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை உறவினர்கள் சென்று செங்கல் சூளையில் பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். செங்கல் சூளை அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கொட்டகைக்கு உள் தங்கியதால் மழை காரணமாக அதிகமான புகை ஏற்பட்டு இதனால் உறக்கத்திலேயே மூச்சு திணறி இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் நடத்தி வந்த செங்கல் சூளைக்கு உரிய அனுமதி உள்ளதா? இல்லையா? என்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்த இருவரின் உடலை மீட்ட வேலூர் தாலுக்கா காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த தம்பதியினரின் சொந்த வீடு கூட இல்லாத நிலையில் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்களின் மூன்று பிள்ளைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் மூத்த மகள் சந்தியா கூறுகையில், ”நேற்று இரவு வரை எங்களுடைய பெற்றோருடன் தான் இருந்தோம், எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அங்கேயே தங்கினார். நாங்கள் வீடு சென்று அடைந்ததும் எங்களுக்கு போன் செய்தும் பேசினர். ஆனால் காலையில் எங்கள் அப்பா, அம்மா இறந்து விட்டதாக கூறுகிறார்கள். எங்களுக்கு யாரும் இல்லை மூன்று பேர் என்ன செய்வது என தெரியவில்லை.அரசு உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.