2021ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடம்: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
டெல்லியில் இருந்து 3,336, மகாராஷ்டிராவில் இருந்து 1,504 புகார்களும், ஹரியாணாவில் இருந்து 1,460 புகார்களும், பிகாரில் இருந்து 1,456 புகார்களும் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31 ஆயிரம் புகார்கள் வந்தன. இதில் பாதிக்கு மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தன என்று தேசிய மகளி்ர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,"நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30,864 புகார்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இது, கடந்த 2020-ம் ஆண்டை காட்டிலும் 30 சதவீதம் அதிகமாகும். மொத்த புகார்களில் 11,013 புகார்கள், பெண்களை உணர்வுபூர்வமாக துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்பானவை. பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 6.633 புகார் களும், வரதட்சணை கொடுமை தொடர்பாக 4,589 புகார்களும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தரபிரசேதத்தில் இருந்து பெறப்பட்டவை. அம்மாநிலத்தில் இருந்து 15,828 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்தபடி யாக டெல்லியில் இருந்து 3,336, மகாராஷ்டிராவில் இருந்து 1,504 புகார்களும், ஹரியாணாவில் இருந்து 1,460 புகார்களும், பிகாரில் இருந்து 1,456 புகார்களும் பதிவாகியுள்ளன".
கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் அதிகமான புகார்கள் கடந்த ஆண்டு வந்துள்ளதாக இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 23,722 புகார்கள் வந்த நிலையில் கடந்த ஆண்டு அதை விட 30 சதவீதம் அதிகமான புகார்கள் வந்துள்ளன என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான புகார்கள் பெண்கள் தங்களை கவுரமான முறையில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத்தரக் கோரியும், குடும்ப வன்முறை குறித்த புகார்களும் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் நடத்தைப் பற்றிய கிண்டல் தொடர்பாக 1819 புகார்களும், பலாத்காரம், பலாத்கார முயற்சி தொடர்பாக 1,675 புகார்களும், போலீஸாரின் வன்முறை தொடர்பாக 1,537 புகார்களும், சைபர் குற்றம் தொடர்பாக 858 புகார்களும் வந்துள்ளன. அதிகபட்சமாககடந்த 2014ம் ஆண்டில் 33ஆயிரத்து 96 புகார்கள் வந்தன அதன்பின் கடந்த ஆண்டு 30ஆயிரத்துக்கு மேல் புகார்கள் வந்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் தற்போது அதிக அளவில் பெறப் படுகின்றன. தேசிய பெண்கள் ஆணையத்தின் பணிகள் குறித்து மக்கள் மத்தியில் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது. பெண்களுக்கு உதவ புதிய முயற்சிகளையும் எடுக்க இருக்கிறோம். 24மணிநேரமும் இயங்கும் உதவி எண்கள், புகார் பதிவு செய்ய உதவி எண்கள் வழங்கியிருக்கிறோம். ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,100 புகார்கள் மாதந்தோறும் வந்தன. கடந்த 2018ம் ஆண்டுதான் கடைசியாக 3ஆயிரம் புகார்களுக்கு மேல் வந்தன” எனத் தெரிவித்தார்.