போதை மாத்திரை கடத்தல், துப்பாக்கியை காட்டி மிரட்டியவர், தங்கம் கடத்தியவர் என அதிர்ந்தது திருச்சி
ரவுடி தமிழரசன் போலீசாரை கண்டதும் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.
தஞ்சாவூர்: திருச்சி மாவட்டத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி, போதை மாத்திரை கடத்தி வந்தவர், கஞ்சா விற்றவர்கள், தங்கம் கடத்தி வந்தவர் கைது என்று க்ரைம் பீட் அதிர்ந்தது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சப்- இன்ஸ்பெக்டர் அருண் குமார் மற்றும் போலீசார் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது பிரபல ரவுடியான காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தமிழ் (எ) தமிழரசன் (40) நாட்டு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு அந்த வழியாக வருவோரை மிரட்டி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். ரவுடி தமிழரசன் போலீசாரை கண்டதும் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். உடன் போலீசார் சட்டென்று அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் தமிழரசனை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரை- க்ரைம் 2
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவர் போலீசை கண்டதும் தப்பி ஓடினார். உஷாரான போலீசார் மற்றொரு வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 100 மில்லி கிராம் எடை கொண்ட 500 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர் திருச்சி சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (24) என்பதும், தப்பி ஓடியவர் பிரபல ரவுடி உறையூர் பாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப் (22 )என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஹரிஷ் குமாரை கைது செய்தனர்.மேலும் தப்பி ஓடிய ரவுடியை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை - க்ரைம் 3
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் நேரு தெரு, சாத்தார வீதி பூ மார்க்கெட், மேலூர் அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கஞ்சா விற்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பாலக்கரை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக சதீஷ்குமார் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
தங்கம் கடத்தல் - க்ரைம் 4
சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் உள்ளது. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உட்பட பல நாடுகளுக்கும் விமான சேவை செயல்பட்டு வருகிறது. தங்கக் கடத்தலுக்கு திருச்சி ஏர்போர்ட்டை குறிவைத்து செயல்பட்டு வரும் மாஃபியா கூட்டம் தற்போது அதிகளவில் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவருடைய உடமையில் உலோக வடிவிலான பொருள் ஒன்று இருந்துள்ளது. அதனை தனியாக எடுத்து சோதனை செய்த போது, அது தங்கம் என தெரிய வந்தது. சுமார் 501 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.