Crime: ஜெபம் செய்வதாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பாவூர்சத்திரம் அருகே மதபோதகர் கைது
சர்ச்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். அப்போது அதில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளாக பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள சர்ச்சில் விசுவாசியாக உள்ளேன். எனது மூத்த மகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது மகள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவம் பார்த்து வரும் நிலையில் வயிற்று வலி குணமாக வேண்டும் என சர்ச்சில் மத போதகராக இருக்கும் ஸ்டான்லி குமாரிடம் எனது மகளுக்காக ஜெபிக்க வேண்டும் என கூறினேன். அப்போது அவர் மகளை அழைத்து வருமாறு கூறினார். இதனால் அவள் குணமடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் மதபோதகரிடம் எனது மகளை அழைத்து வந்தேன். அப்போது மத போதகர் ஸ்டான்லி குமார் எனது மகளை சர்ச்சில் 3 நாட்கள் தங்குமாறு கூறினார். அவர் மீது உள்ள நம்பிக்கையில் மகளை அங்கே விட்டு விட்டு வந்தேன். ஆனால் மத போதகர் ஜெபிக்கிறேன் எனக்கூறி எனது மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் எனது மகளிடம் ஆபசமாக பேசியதுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே இது குறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்தார்.
இவர் கிறிஸ்தவ சங்கங்களின் மாவட்ட பொறுப்பில் இருந்து வருவதால் எதற்கும் அஞ்சாமல் பல பெண்களிடம் தவறாக நடந்து வருவதோடு பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வருவதும் தெரிய வந்துள்ளது. பல பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பயந்து இதுகுறித்து அப்பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாகவும் தெரிய வந்தது. எனது மகள் புகார் அளித்துவிடுவார் என்பதற்காக இரண்டாவது மகளை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்பது போல நடித்து இதுகுறித்து புகார் தெரிவித்தால் தற்கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே இப்புகார் மனு குறித்து விசாரணை நடத்திய பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் கவிதா கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த மத போதகரான ஸ்டான்லின் குமாரை கைது செய்தார். சர்ச்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்