திருச்செந்தூர் அருகே மாயமான தூய்மை பணியாளர் கொன்று புதைப்பு - உறவினர்களால் சாலை மறியலால் பரபரப்பு
மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில், இன்டிகேட்டர் உடைந்து விட்டது. அதை மாற்றுவதற்கு பணம் கேட்டு பாலகண்ணனிடம், ராஜா உள்ளிட்டவர்கள் தகராறு செய்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகே அனல் மின்நிலைய ஊழியர் கொன்று புதைக்கப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பாலகண்ணன் (வயது 40). இவர் உடன்குடி அருகே கல்லாமொழி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பேச்சியம்மாள் (31) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மாயம் கடந்த 7-ந் தேதி வேலைக்கு சென்ற பாலகண்ணன் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமானது குறித்து பேச்சியம்மாள் கடந்த 9-ந் தேதி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகண்ணனை தேடி வந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் திருச்செந்தூர்-நெல்லை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பாலகண்ணன் சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே டாஸ்மாக் கடைக்கு சென்றுவிட்டு திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்த ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிள் பாலகண்ணன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில், இன்டிகேட்டர் உடைந்து விட்டது. அதை மாற்றுவதற்கு பணம் கேட்டு பாலகண்ணனிடம், ராஜா உள்ளிட்டவர்கள் தகராறு செய்துள்ளனர்.
அதன் பின்னர்தான் பாலகண்ணன் மாயமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் புறா ராஜாவுடன் வந்த ஜீவா நகரச் சேர்ந்த சுடலை மணி, பாலமுருகன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் பால கண்ணனை வீரபாண்டியப்பட்டினம் ஜே ஜே நகர் காட்டுப்பகுதியில் கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர கொலையில் ராஜா உள்பட 5 பேர் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரியவந்தது.
பாலகண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாலகண்ணன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். பிரேத பரிசோதனையை தாமதப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். போலீசாருடன் தள்ளுமுள்ளு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் துணை போலீஸ் காவல்துறை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆய்வாளர் முரளிதரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார், பேச்சுவார்த்தைக்காக உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், கொன்று புதைக்கப்பட்ட பாலகண்ணன் உடல் இன்று தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. புதைக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்செந்தூர் அருகே அனல் மின்நிலைய ஊழியரை கொன்று புதைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.