Funbucket Bhargav Case: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - டிக்டாக் பிரபலம் கைது
பாதிக்கப்பட்ட சிறுமி 4 மாத கர்ப்பிணி என்று குடும்பத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
![Funbucket Bhargav Case: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - டிக்டாக் பிரபலம் கைது TikTok Star Funbucket Bhargav Arrested For Allegedly Raping 14-Year Minor Girl Funbucket Bhargav Case: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - டிக்டாக் பிரபலம் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/21/27068c2bbb0d8aa849a07b3c090d17d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டிக்டாக் ஆந்திரா பிரபலம் ஃபன்பக்கெட் பார்கவ் கைது செய்யப்பட்டார்.
டிக்டாக் வீடியோக்களால் மிகவும் பிரபலமடைந்தவர் சிப்பாடா பார்கவ். ஃபன்பக்கெட் பார்கவ் என்றும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பார்கவ் உடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பார்கவுக்கு ஊடகத்தினர் பலர் நெருக்கம் என கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுமிக்கு மீடியா சேனல்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, பார்கவ் உடன் பேசி வந்த நிலையில், பார்கவின் பேச்சு, செயல்கள் மோசமாக இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து விலகினார். ஆனால், பார்கவ் தன்னிடம் உன் வீடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டியதோடு மட்டுமல்லாமல், சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கருத்தரித்துள்ளார். சிறுமி 4 மாத கர்ப்பிணி என்று குடும்பத்தாருக்கு தெரியவந்ததை அடுத்து, கடந்த 16ஆம் தேதி சிறுமியின் குடும்பத்தார் விசாகப்பட்டினம் கமிஷனரேட்டின் கீழ் உள்ள பெண்டூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த பாலியல் வன்கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் ஆந்திர காவல்துறையினரால் ஹைதராபாத்தின் கொம்பள்ளியில் கைது செய்யப்பட்டார்.
போக்ஸோ சட்டத்தைத் தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 , 354 ஆகிய பிரிவின் கீழ் பார்கவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டார்.
இது ஒரு போக்ஸோ வழக்கு என்பதால், அதை விசாகப்பட்டினத்தில் உள்ள திஷா காவல்நிலையத்திற்கு மாற்றியுள்ளதாக பெண்டூர்த்தியைச் சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னார், ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க திஷா காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மே 3 வரை நீதித்துறை ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் திஷா உதவி போலீஸ் கமிஷனர் பிரேம் காஜல் கூறினார்.
மேலும், பார்கவிடம் இருந்து வெள்ளை நிற நிசான் கார் மற்றும் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிரும் நபர்களை காவல்துறையினர் எச்சரித்ததுடன் , அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
சமூகவலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், பெற்றோரும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்த அறிவுறுத்தலை பின்பற்றினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)