வெளிநாட்டு மோகத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த முதியவர் - தஞ்சையில் நடந்த பரிதாபம்
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சையை சேர்ந்த முதியவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சையை சேர்ந்த முதியவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை கீழ வாசல் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக பல இடங்களில் முயற்சி செய்துள்ளார். அப்போது அவருடைய மெயிலுக்கு அமெரிக்காவில் வேலை இருப்பதாக கூறி ஒரு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து அந்த தகவலில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு அந்த முதியவர் கேட்டுள்ளார். செல்போனில் பேசிய மர்ம நபர், வேலைக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்காக விசா உட்பட பல கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.8.75 லட்சம் பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் கூறிய படி ரூ.8.75 லட்சத்தை வங்கி கணக்கில் முதியவர் செலுத்தியுள்ளார். நாட்கள் பல கடந்தும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த முதியவர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர். இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்களிடம் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
கார்கள் திருடிய மர்மநபர்கள்
தஞ்சை பாரதிதாசன்நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (50). இவர் நியூ ஹவுசிங் யூனிட் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய அலுவலகம் எதிரே இரண்டு கார்களை நிறுத்தியிருந்தார். இந்த 2 கார்களை மர்மநபர்கள் திருடிசென்று விட்டனர். இதுகுறித்து அன்பழகன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (22) என்பவர் தஞ்சை ரஹ்மான் நகரில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டில் தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பைக்கை பல இடங்களில் தேடிபார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. அன்பழகனும் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இந்த புகார்களின் பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெகடர் ஜெயமோகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.