Crime: திருமணத்தை மீறிய தகாத உறவு.. விஷ ஊசி போட்டு கணவன் கொலை.. மனைவி உட்பட 4 பேர் கைது!
தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறு செய்த கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறு செய்த கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன், டாக்டர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள சிந்தகனி அடுத்த பொப்பரம் கிராமத்தை சேர்ந்த ஜமால் சாஹேப்- இமாம்பி தம்பதி, தங்களது மகளை ஆந்திர மாநிலம், ஜகையபேட்டை யில் திருமணம் செய்து கொடுத்தனர். கடந்த வாரம் இமாம்பி தனது மகளை பார்க்க ஜகையபேட்டைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, கடந்த 19ம் தேதியும் காலை 9 மணியளவில் ஜமால் தனது மகள் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். பாணாபுரத்தை கடந்ததும், மர்ம நபர் லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்றி கொண்டு சென்றார். பைக் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே லிப்ட் கேட்டு வந்த நபர் மறைத்து வைத்திருந்த ஊசியை ஜமால் சாஹேப் உடலில் செலுத்தி விட்டு கீழே குதித்து தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் ஜமால் சாஹேப் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜமால் சாஹேப் உடலில் செலுத்திய ஊசியால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து கம்மம் போலீஸ் கமிஷனர் விஷ்ணுவாரியார் தலைமையில் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இமாம்பிக்கும் சிந்தகனி அடுத்த மட்கே பள்ளி நாமவராவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகனுக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து உள்ளது. இவர்களது திருமணத்திற்கு மீறிய உறவு கணவர் ஜமாலுக்கு தெரிந்ததால் மோகனை அழைத்து மிரட்டியும், தனது மனைவியையும் கண்டித்துள்ளார்.
இதனால் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவரை சந்தேகமின்றி கொல்ல மோகன் முடிவு செய்துள்ளார். அதன்படி, மோகன் அவரது நண்பரான நாமாவரம் கிராமத்தை சேர்ந்த ஆர்.எம்.பி. மருத்துவரான கொட வெங்கடேஷிடம் ஒரு ஊசியை கொடுத்துள்ளார். இந்த ஊசியை ஜமால் உடலில் செலுத்தினால் இயற்கையான மாரடைப்பில் இறந்தது போன்று ஆகிவிடும் என டாக்டர் கூறியுள்ளார்.
இதையடுத்து சுமார் 2 மாதமாக காத்திருந்த மோகன், இமாம்பி உதவியுடன் பைக்கில் தனியாக சென்ற ஜமால் உடலில் டாக்டரை வைத்து அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பின்னர் அந்த டாக்டர் அவரது மற்றொரு நண்பர் நரிசெட்டி வெங்கடேஷ் உதவியுடன் தப்பி சென்றுள்ளார். இவ்வாறு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜமால் மறைவுக்கு காரணமான இமாம்பி, மோகன், நரிசெட்டி வெங்கடேஷ், மருத்துவர் கொட வெங்கடேஷ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஜமால் உடலில் செலுத்தப்பட்ட ஊசி விஷத்தன்மை வாய்ந்ததா என்ற நோக்கத்திலும் விசாரித்து வருகின்றனர்.