தாம்பரம் பணிமனை சூப்பர்வைசர் தற்கொலை: உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமா? பகீர் கடிதம் பரபரப்பு!
"தாம்பரம் போக்குவரத்து பணிமனை சூப்பர்வைசர் ரயிலில் பாய்ந்து தற்கொலை, உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என பகீர் கடிதம்"

சென்னை, தாம்பரம் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி, இன்று காட்டாங்குளத்தூர் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட அந்த ஊழியர், தனது முடிவை எடுப்பதற்கு முன்னர், சென்னை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், தனது நெருங்கிய சக ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தனது மன உளைச்சலையும், தற்கொலை முடிவையும் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார்.
தற்கொலைக்கு காரணம் என்ன ?
அந்த சூப்பர்வைசர், பணி ரீதியான கடமைகளைச் செய்து வந்த நிலையில், உயர் அதிகாரிகளில் சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் மீது குறிவைத்துத் துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட சூப்பர்வைசர், தனது மரணத்திற்கு முன்னால், காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) மின்னஞ்சல் மூலமாக ஒரு விரிவான தற்கொலைக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது பண பலன்கள் (Service Benefits) அனைத்தும் எந்தத் தடையும் இன்றி தனது குடும்பத்தினரைச் சென்று சேர வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் தீவிர விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே காவல்துறையினர் காட்டாங்குளத்தூரில் அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஊழியர் அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ் அப் செய்திகளை வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை கடிதத்தில் இருந்தது என்ன ?
உயிரிழந்த யுவராஜ் காவல்துறைக்கு அனுப்பி உள்ள தற்கொலை கடிதத்தில், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் பணிபுரிந்து வந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி கழுத்து வலி காரணமாக பணிக்கு செல்லவில்லை. இது சம்பந்தமாக தாம்பரம் பணிமனை மேலாளருக்கு எனது மருத்துவ சான்றிதழ் அனுப்பி விடுமுறை கேட்டிருந்தேன். ஆனால் அவர் எனது மருத்துவ விடுப்பை நிராகரித்துவிட்டு, நான் அனுப்பிய மருத்துவ சான்றிதழ்களை எனக்கு திருப்பி அனுப்பி விட்டார். பிறகு நான் அதே மருத்துவ சான்றிதழ்களை HRD சொர்ணலதாதா என்பவருக்கு அனுப்பி வைத்தேன். அவரும் தனது விடுப்பை நிராகரித்துவிட்டார்.
மேலும் தனக்கு விடுப்பு போட்டு விட்டதாகவும் அந்த தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளார். நான் மீண்டும் பணிக்கு வரக்கூடாது என்பதற்காக 11c கொடுத்துவிட்டதாகவும், கடந்த மூன்று மாதங்களாக எனக்கு பணியும் வழங்காமல், ஊதியமும் இல்லாமல் செய்து விட்டார்கள். எனவே நான் மன உளைச்சலில் இருப்பதாகவும். தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காரணம் ஸ்வர்ணலதா மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் தான் பொறுப்பு என கடிதத்தை காவல்துறைக்கு அனுப்பியுள்ளார். மேலும் தனது பணி பலன்கள் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும், இந்த கடிதத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பி தெரிவித்துள்ளார். ஊழியர் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















