Liquor Smuggling: சீர்காழியில் சொகுசு காரில் சாராயம் கடத்தல் - சாராய பாட்டில்களை மண்ணில் ஊற்றி அழித்த போலீஸ்
சீர்காழியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திவரப்பட்ட காரைக்கால் மதுபானங்கள், கார் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![Liquor Smuggling: சீர்காழியில் சொகுசு காரில் சாராயம் கடத்தல் - சாராய பாட்டில்களை மண்ணில் ஊற்றி அழித்த போலீஸ் Sirkazhi Liquor Smuggling 2000 bottles of liquor smuggled in car seized Liquor Smuggling: சீர்காழியில் சொகுசு காரில் சாராயம் கடத்தல் - சாராய பாட்டில்களை மண்ணில் ஊற்றி அழித்த போலீஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/f2a438b6069e52d09a87c6fea75af2df1657618043_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது. இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மாநில மது விற்பனை என்பது தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை என கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் சாராய வியாபாரியை மீண்டும் சாராயம் விற்பனை செய்ய கூறி காவலர்கள் மிரட்டல் விடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போனதாக சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் கூண்டோடு பணியிடை மற்றம் செய்யப்பட்டனர். அதேபோன்று கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ காட்சிகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு அதிக அளவில் பாண்டிச்சேரி மதுபானங்கள் கடத்தி வருவதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து, வள்ளுவகுடி சாலையில் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது, அவ்வழியாக வந்த சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையின் போது, காரில் காரைக்காலில் இருந்து 2000 சாராயம் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பாண்டூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கூத்தியம் பேட்டை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் 3 பேர் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து சீர்காழி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 சாராய பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் மதுபானங்களின் மொத்த மதிப்பு சுமார் பல லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாட்டில்களை காவல்துறையினர் மண்னில் ஊற்றி அழித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)