Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
தனியாக இருக்கும் மூதாட்டிகளை தாக்கி பறித்து வரும் நகைகளை தனது தாய், மனைவியிடம் கொடுக்கவும், அவர்கள் தனியார் வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்று வாழ்ந்து வந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டியில் மூதாட்டி சரஸ்வதி என்பவரை கடந்த வாரத்தில் மர்ம நபர் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தியை கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இக்கொலை, கொள்ளையில் ஈடுபட்டது, ஓமலூர் கட்டிக்காரனூரை சேர்ந்த பிரபல ரவுடி நரேஷ் குமார் எனத் தெரியவந்தது. அவரை சங்ககிரி, மகுடஞ்சாவடி போலீசார் மற்ற 2 இடங்களில் மூதாட்டிகளை தாக்கி நகையை பறித்து சென்ற வழக்கில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 24ம் தேதி அதிகாலை சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த கொள்ளையன் நரேஷ் குமாரை மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், கடந்த 9ம் தேதி கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் முதியவரை கொலை செய்து, செல்போன், பணத்தை பறித்து வந்ததும் தெரியவந்தது.
சிகிச்சையில் இருக்கும் நரேஷ் குமாரை மகுடஞ்சாவடி, சங்ககிரியில் மூதாட்டிகளிடம் நகையை பறித்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை பற்றி சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், கொள்ளையன் நரேஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டிகளிடம் பறித்த நகைகளை தனது தாய் புஷ்பா, மனைவி வீணா ஆகியோரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையன் நரேஷ் குமாரின் தாய் புஷ்பா, மனைவி வீணா ஆகிய இருவரையும் நேற்று சங்ககிரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சங்ககிரியில் மூதாட்டி பெருமாயியிடமும், மகுடஞ்சாவடியில் மூதாட்டி ராசம்மாளிடமும், தீவட்டிப்பட்டியில் கொலையுண்ட மூதாட்டி சரஸ்வதியிடமும் பறிக்கப்பட்ட தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை மீட்டனர். மேலும், கள்ளக்குறிச்சியில் ஒரு மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட நகையையும் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையன் நரேஷ் குமார், தனியாக இருக்கும் மூதாட்டிகளை தாக்கி பறித்து வரும் நகைகளை தனது தாய், மனைவியிடம் கொடுக்கவும், அவர்கள் தனியார் வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேலம் அரிசிபாளையத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்துள்ளனர். அவ்வப்போது அங்கு வரும் நரேஷ் குமார், தான் பறித்த நகையை கொடுத்து விட்டு, ஒருநாள் அல்லது 2 நாள் மட்டும் இருந்து விட்டு மீண்டும் வெளியில் சென்றுவிடுவார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான தாய் புஷ்பா, மனைவி வீணா ஆகிய இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




















