தீயில் எரிந்த நிலையில் மூதாட்டியின் சடலம்... சேலத்தில் பரபரப்பு - நடந்தது என்ன?
இறப்புக்கான காரணம் குறித்து தடவியல் துறை நிபுணர்கள் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரம்.

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி (60) என்ற மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள் கலைச்செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். குறிப்பாக தினசரி உணவு வழங்குவது, தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு விட்டு கலைச்செல்வி அவரது இல்லத்திற்கு சென்றுவிடுவார். இதேபோன்று நேற்றிரவு உணவு கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் காலை தாயாரை பார்ப்பதற்காக வந்து பார்த்தபோது தீயில் உடல் முழுவதும் எரிந்து சடலமாக கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி கதறி அழுந்துள்ளார். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் துறை நிபுணர்களை கொண்டு தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறிப்பாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக அன்னலட்சுமி இருக்கும் நிலையில் அவருக்கு உதவியாக மின்விசிறி உள்ளிட்டவைகளை ஆன் செய்வதற்கு அருகிலேயே சுச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுச்சை ஆன் செய்யும்போது மின்சாரம் தாக்கி தீ பற்றி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





















