CBI Raid: கட்டுக் கட்டாக ரூ.5 கோடி, 1.5 கிலோ தங்கம், மெர்சிடஸ் & ஆடி கார், 22 வாட்ச்கள் - அலறவிட்ட ஐபிஎஸ்
CBI Raid Punjab IPS: சிபிஐ நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் சிக்கியதை அடுத்து பஞ்சாபை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

CBI Raid Punjab IPS: பஞ்சாபைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஹர்சரண் சிங், அவரது உதவியாளருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ சோதனை
பஞ்சாபில் உள்ள ரோபர் ரேஞ்சில் டிஐஜி ஆக உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது. ரூ.8 லட்சம் லஞ்சம்கேட்டதாக தொடங்கப்பட்ட ஒரு வழக்கு, மிகப்பெரிய கணக்கில் காட்டப்படாத சொத்துப் பட்டியலை அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.5 கோடி ரொக்கம், சொகுசு வாகனங்கள், நகைகள் மற்றும் உயர் ரக கடிகாரங்கள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன.
2009-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர், அவரது இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிருஷ்ணா என்ற தனி நபருடன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் தொழிலதிபர் ஒருவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை முடித்து வைக்க இந்த இடைத்தரகர் மூலம் லஞ்சம் கேட்டுப் பெற்றுக்கொண்டதாகவும், மாதாந்திர தவணைகளை தொடர்ச்சியாகப் பெற்று வந்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
வெளிச்சத்துக்கு வந்த லஞ்ச நடவடிக்கை:
ஃபதேகர் சாஹிப்பைச் சேர்ந்த ஆகாஷ் பட்டா என்ற ஸ்கிராப் வியாபாரி அளித்த புகாரின் பேரில் சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.8 லட்சம் லஞ்சம் கொடுப்பதோடு மாதா மாதா பணம் கொடுக்காவிட்டால், வணிக நடவடிக்கைகள் தொடர்பான போலி வழக்கில் தன்னை சிக்க வைப்பேன் என டிஐஜி மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, புகார்தாரரிடமிருந்து டிஐஜி சார்பாக அவரது இடைத்தரகர் கிருஷ்ணா ரூ.8 லட்சத்தை வாங்கும்போது சிபிஐ அதிகாரிகள் கையில் களவுமாக கைது செய்தனர். புகார்தாரருக்கும் டிஐஜிக்கும் இடையே ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதில் பணம் பெற்றதை அதிகாரி ஒப்புக்கொண்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், சிபிஐ குழு டிஐஜி புல்லரை மொஹாலியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்தது.
₹5 crore in cash, 1.5 kg gold ornaments, among things recovered during CBI raid
— Piyush Rai (@Benarasiyaa) October 16, 2025
from the residence of Punjab 2009-bath IPS Harcharan Singh Bhullar, accsued of accepting bribe. pic.twitter.com/UumuxcGTfg
ரெய்டும்.. அலறவிட்ட ஐபிஎஸ் அதிகாரியும்..
கைது நடவடிக்கையை தொடர்ந்து டிஐஜிக்கு தொடர்புரைய பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கிடைத்தவை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- கட்டுக்கட்டாக ரூ.5 கோடி பணம் (கிடைத்த பணத்தை எண்ணும் பணி தொடர்கிறது)
- 1.5 கிலோ தங்கம் & நகைகள்
- பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் அசையா சொத்துகளுக்கான ஆவணங்கள்
- விலையுயர்ந்த கார்களானமெர்சிடஸ், ஆடிக்கான கார்கள்
- 22 உயர் ரக கைகடிகாரங்கள்
- லாக்கர் சாவிகள்
- இறக்குமதி செய்யப்பட்ட 40 லிட்டர் மதுபானம்
- டபுள் பேரல் ஷார்ட் கன், பிஸ்டல், ரிவால்வர் மற்றும் ஏர்கன்
- இதுபோக இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணா வீட்டில் இருந்தும் ரூ.21 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
ஹர்சரண் சிங்கின் லஞ்சக் கரங்கள் எவ்வளவு ஆழமாக நீண்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்காக சோதனை பணிகள் தொடர்வதாகவும், இருவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஹர்சரண் சிங்?
2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பஹர்சரண், பாட்டியாலா ரேஞ்சின் டிஐஜி, விஜிலென்ஸ் பீரோவின் இணை இயக்குநர் மற்றும் மொஹாலி, சங்ரூர், கன்னா, ஹோஷியார்பூர், ஃபதேஹ்கர் சாஹிப் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில், சிரோமணி அகாலிதளம் (SAD) தலைவர் பிக்ரம் சிங் மஜிதியாவுக்கு எதிரான உயர்மட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) வழிநடத்தினார். மாநிலம் முழுவதும் போதைப்பொருள் வலையமைப்பை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரமான 'யுத் நஷேயன் விருத்' இல் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
புல்லர் நவம்பர் 2024 இல் ரோபர் ரேஞ்சின் டிஐஜியாகப் பொறுப்பேற்று, மொஹாலி, ரூப்நகர் மற்றும் ஃபதேகர் சாஹிப் மாவட்டங்களை மேற்பார்வையிட்டார். அவர் பஞ்சாப் முன்னாள் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) எம்எஸ் புல்லரின் மகனும் ஆவார்.





















