புதுச்சேரி ஊசுடு ஏரி சுற்றுலா 3 படகுகளை தீ வைத்து எரித்த சமூகவிரோதிகள்
சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
புதுச்சேரி: புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியாக ஊசுடு ஏரி உள்ளது. புதுச்சேரியின் குடிநீர் தேவைக்கு பயன்படுவது மட்டுமின்றி பறவைகள் சரணாலயமாகவும் ஊசுடு ஏரி திகழ்கிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் படகு குழாமும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அமைதியான சூழலில் படகு சவாரி செய்து பறவைகளை கண்டுரசிப்பது வாடிக்கை. சமீப காலமாக ஊசுடு ஏரி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குருமாம்பேட் பாண்லே முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு அவ்வழியே திருக்கனூர் செல்லும் பொதுமக்களிடம் ரவுடிகள் வழிப்பறி நடத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் இவ்வழியே செல்லவே அச்சப்பட வேண்டியுள்ளது. ஊசுடு ஏரியின் கரையோரத்தில் இரவில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் சமூக விரோதிகள் அவ்வழியே வருவோரிடம் தகராறில் ஈடுபடுவது, செல்போன், பணம், நகை பறிப்பில் ஈடுபடுகின்றனர். சமூகவிரோதிகளுக்குள் ஏற்படும் தகராறால் சட்ட ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துக்கு சொந்தமான 3 படகுகளை சமூக விரோதிகள் குடிபோதையில் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அரசுக்கு வீண் பண விரயமும் ஏற்பட்டுள்ளது. எனவே புதுவை அரசு இப்பகுதியில் அனைத்து தெருவிளக்குகளையும் எரிய செய்ய வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து இந்த சாலையை வெளிச்சம் மிகுந்த சாலையாக்க வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து சமூகவிரோதிகளை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் ஊசுடு ஏரிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளிடையே நிலவும் அச்சத்தை போக்க முடியும். மேட்டுப்பாளையம் வழியாக திருக்கனூர் செல்லும் மக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக நல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.