‛ராபின் ஹுட்’டாக மாறி சொந்த வீட்டில் மருகளிடம் நகை திருடிய மாமியர்... ஹாலிவுட் இம்ப்ரெஷனாம்!
கரடி வேடமிட்டு வந்தவர்கள் தனக்கு மயக்க ஊசி போட்டு வீட்டில் இருந்த ஆறு சவரன் நகையை திருடி சென்றதாக 100 க்கு போன் செய்து நாடகமாடி பணத்தை திருடிய பெண்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் உள்ள ஆவுடையம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பார்வதி அம்மாள். 55 வயதாகும் இந்த பார்வதி அம்மாள் கோவில்பட்டியின் ராபின் ஹுட்டாக மாறிய சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் தெளிவாக திட்டமிட்டு வீட்டிலேயே ஒரு திருட்டை நிகழ்த்தியவரை அறிவியல் காட்டிக்கொடுத்து விட்டது. அவருடைய திட்டங்களை பார்த்தால் பல ஆங்கில மொழி படங்கள் பார்ப்பவர் போல தோன்றுகிறது. அவர் போலீசாரிடம் ஆடிய நாடகத்தில் நடித்திருப்பதை கேட்கும்போது ஒரு தேர்ந்த நடிகரை தனக்குள் ஒளித்து வைத்து வாழ்ந்து வந்திருக்கிறார் பார்வதி அம்மாள். சம்பவம் அரங்கேறும்போது மட்டுமின்றி மருத்துவர்களிடமும், மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகும் மயக்கம் வருவது போலும் நடித்தது போலீசார் பலரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சொந்த வீட்டிலேயே நாடகமாடி நகைகளை திருட முயன்றது குடும்பத்தார் இடையே மன கசப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்வதி அம்மாள் புதன்கிழமை இரவு வீட்டில் தனிமையில் இருந்திருக்கிறார். அன்று தசரா பண்டிகை என்பதால் பண்டிகைக்கு வேடம் அணிந்து பக்தர்கள் வருவது தூத்துக்குடி திருநெல்வேலி பார்டர்களில் உள்ள ஊர்களின் வழக்கம். அதாவது குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் கோலாகல விழாவுக்கு விதவிதமாக வேடமிட்டு பக்தர்கள் செல்வார்கள். இதையெல்லாம் இணைத்து ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி நகைகளை எடுத்து வேறு இடத்தில் ஒளிய வைத்து விட்டு, 100 என்னும் அவசர காவல் உதவிக்கு போன் செய்து, கரடி வேடம் அணிந்து வந்த சிலர் தன்னை கட்டிப் போட்டுவிட்டு மயக்க ஊசி செலுத்தி, 6 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார் பரபரப்புடன் பார்வதி அம்மாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்வதி அம்மாளின் உடலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார்கள். மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தப்படவில்லை என்பதை ஆணித்தரமாக உறுதி செய்தனர். இதனால் குழம்பிப்போன போலிஸார் பார்வதி அம்மாளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
எல்லாவற்றையும் சரியாக செய்து, மயக்க ஊசி என்ற சிறு துரும்பில் மாட்டிக்கொண்ட பார்வதி அம்மாள் விசாரணையில் தனது தம்பிக்கு உதவி செய்வதற்காக கொள்ளைச் சம்பவம் போல் நாடகம் அரங்கேற்றி அதில் நடித்ததை ஒப்புக்கொண்டார். தனது மருமகள் இசக்கியம்மாளின் நகைகளை திருடி அதனை தனது தம்பி வரதராஜனிடம் கொடுத்து அனுப்பியதும், அவசர போலிஸ் 100 நம்பருக்கு போன் செய்து கொள்ளை நடைபெற்றதாக போலிஸாரிடன் பொய் கூறியதும் அம்பலமானது. இதையடுத்து 55 வயதான பார்வதி அம்மாளை, காவல் ஆய்வாளர் பத்மாவதி, காவல் உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி, தலைமைக் காவலர் ஜெயபால், உள்ளிட்டோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.