வேலூரில் பிஸ்கட் வியாபாரியின் வீட்டின் பீரோவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கவேல் (57) இவர் பிஸ்கெட் தயாரித்து, கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். மாணிக்கவேல் தனது மனைவி புஷ்பா மற்றும் மகளுடன் கும்பகோணத்தில் உள்ள திருமஞ்சேரி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு இரவு 9 மணியளவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கொண்டு அதிர்ச்சி அடைந்த மாணிக்கவேல் உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள அறைகளில் இருந்த பல இடங்களில் துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து மாணிக்கவேல் உடனடியாக சத்துவாச்சாரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன்பாபு, ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் மாணிக்கவேல் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மாணிக்கவேலின் குடும்ப நிகழ்வுகளை நன்கு அறிந்த அதே பகுதியை சேர்ந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் காவல்துறையினரின் மோப்பநாய் வரவைக்கப்பட்டு வீட்டினுள் சிறிது நேரம் மோப்பம் பிடித்தது. மோப்பம் பிடித்த பிறகு அந்தத் தெருவில் சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் துரத்தி கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமராவில் அந்தத்தெருவில் இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் மர்மநபரின் உருவம் கேமராவில் பதிவாகியிருந்தது. அவர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சத்துவாச்சாரியில் பிஸ்கெட் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.