Crime: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை - கோவில்பட்டி அருகே பரபரப்பு
கொலை செய்யப்பட்ட பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்(65). இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர் காலை ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று விட்டு, மதியம் 12 மணிக்கு மேல் தெற்கு திட்டங்குளம் விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் பொன்ராஜை வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேசன், காவல் ஆய்வாளர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் விசாரணையில் உள்ள கார்த்திக், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பொன்ராஜ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டபோது, அவரது மனைவி பொன்னுத்தாய் வெற்றி பெற்று தலைவராக பணியாற்றினார். மேலும், பொன்ராஜ் எப்போதும் தலைப்பாய் கட்டுடன் இருப்பதால் அவரை தலைப்பாய் கட்டு தலைவர் என்று ஊர் மக்கள் அழைப்பது வழக்கம்.
முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திட்டங்குளத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கார்த்திக், திட்டங்குளத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும், திட்டங்குளம் வழியாக வந்து செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொன்ராஜிடம் கொடுத்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆட்டுத் தொழுவத்தில் இருந்த பொன்ராஜை சந்தித்து, கோரிக்கை மனு குறித்து பேசுவதற்காக கார்த்திக்கும், அவருடன் சிறுவனும் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், இருவரும் சேர்ந்து, பொன்ராஜை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார், கார்த்திக் மற்றும் சிறுவனை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் மட்டும் தான் இந்த கொலையை செய்தார்களா, அல்லது வேறு யாரும் உடன் சென்றார்களா, இந்த கொலை சம்பவத்திற்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வெட்டி படுகொலை செய்யப்பட்ட திட்டங்குளம் பஞ்., தலைவர் பொன்ராஜின் உடல், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் திட்டங்குளம் பஞ்., பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் மருத்துவமனி முன் திரண்டனர். இந்நிலையில், பொன்ராஜை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், விரைவாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பொன்ராஜின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கோவில்பட்டி புதுரோட்டில் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.டி.எஸ்.பி., கார்த்திகேயன், டி.எஸ்.பி., வெங்கடேஷ் மற்றும் போலீசார், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சுமார் அரை மணி நேரத்திற்கு பின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இந்த போராட்டத்தினால், கோவில்பட்டி புதுரோட்டில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.