Crime: நெல்லையில் பயங்கரம்; உணவு டெலிவரி ஊழியர் கொடூர கொலை
முகேஷின் குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தை சேர்ந்தவர் முகேஷ். இவருக்கு சுபிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது குருந்துடையார்புரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுடலை மாடசாமி கோவில் அருகே வரும் பொழுது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் முகேஷை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடம் வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸார் முகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முகேஷின் மனைவி சுபிதா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், முகேஷின் குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே இதற்கு முன் அடிதடி சம்பவம் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான வழக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் உயிரிழந்த முகேஷ் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கொலையாளிகள் என சந்தேகப்பட்ட சின்ன குட்டி மற்றும் அவர்களது சகோதரர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது யாரும் வீடுகளில் இல்லாத நிலையில் கொலைக்கு இவர்கள்தான் காரணம் என ஆத்திரமடைந்து அவர்களது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சூறையாடினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காமராஜர்புரம், கீழவீரராகவபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்