Crime: கணவனை பிரிந்து வாழும் பெண்களே குறி.. சினிமாவை மிஞ்சும் ப்ளான் போட்ட கொடூரம்.. குவியும் புகார்கள்!
நாகர்கோவிலில் கணவனை பிரிந்து வாழும் பெண்களை மடக்கி உல்லாசமாக இருந்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
![Crime: கணவனை பிரிந்து வாழும் பெண்களே குறி.. சினிமாவை மிஞ்சும் ப்ளான் போட்ட கொடூரம்.. குவியும் புகார்கள்! Nagercoil youth who was flirting and threatening women living separated from their husbands Crime: கணவனை பிரிந்து வாழும் பெண்களே குறி.. சினிமாவை மிஞ்சும் ப்ளான் போட்ட கொடூரம்.. குவியும் புகார்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/9279d9dbfd0f50f3fccbc82dc309305b1673321258639571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாகர்கோவிலில் கணவனை பிரிந்து வாழும் பெண்களை மடக்கி உல்லாசமாக இருந்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்த 27 வயதான வாலிபர் மீது குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் தக்கலை டிஎஸ்பி அலுவலகம், குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர்.
அந்த பெண்கள் அளித்த புகார்கள் பின்வருமாறு: குழித்துறையை சேர்ந்த பெண்ணான, நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். 2021ல் எனது செல்போனுக்கு வந்த மிஸ்ட் கால் வந்தது. அதில், மேல்புறம் பகுதியை சேர்ந்த 27 வயதான வாலிபர் ஒருவர் அறிமுகம் ஆனார். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக என்னிடம் கூறி பழகி வந்தார். முதலில் நட்பாக தொடங்கிய எங்களது பழக்கம் நாளடைவில் நெருக்கத்தை உண்டாக்கியது. அவரது பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்ட நான், அவரிடம் தனிமையில் நெருங்கி பழகினேன். நானும் அவரும் தனிமையில் இருந்தபோது அவற்றை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தார். என்னை திருமணம் செய்வதாக கூறி என்னிடமிருந்து 15 பவுன் நகைகளையும் வாங்கி சென்றார்.
இந்தநிலையில், அவரது வீட்டில் தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதுபற்றி நான் அவரிடம் கேள்வி எழுப்பியபோது எடுத்த வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். மேலும் என்னிடம் பழகியது போன்று இவரது உறவினரான பெண் ஒருவருடனும் பழகி அவரை 2ம் திருமணம் செய்வதாக உறுதியளித்து நெருக்கமாக இருந்து, அந்த பெண்ணையும் மூன்று மாதத்தில் ஏமாற்றியுள்ளார்' என்று தெரிவித்திருந்தார்.
இதேபோன்று, குளச்சலை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதுகுறித்து இந்த பெண் அளித்த புகாரில், 'கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து எனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். பேஸ்புக் பக்கத்தில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து அதன் மூலம் அந்த வாலிபர் என்னிடம் பழகினார். தன்னை இரண்டாம் திருமணம் செய்வதாகவும், குழந்தைகளை பார்த்துக் கொள்வதாகவும் கூறியதால் அவருடன் நெருங்கி பழகினேன். அவர் நாங்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோவில் பதிவு செய்தார். எனது நகை, பணத்தை எல்லாம் கொடுத்தேன்.
இந்தநிலையில்தான், அவரது செல்போனை எதார்ச்சையாக பார்த்த போது பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள், வீடியோக்கள் நிறைய இருந்தன. மேலும் அவற்றை தனித்தனி போல்டரில் பெயர் பதிவு செய்து வைத்துள்ளார். என்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டாயே என்று கேட்டதற்கு அவர் என்னை மிரட்டுகிறார்' என்று தெரிவித்து உள்ளார்.
திரைப்படங்களில் வருவதுபோல் ஒரே நேரத்தில் பல பெண்களிடம் நெருக்கமாக பழகி, அவர்கள் ஏமாந்த நேரத்தில் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வந்துள்ளார். இதையே முழுநேர பணியாகவும் செய்து வந்துள்ளார். சரியாக கணவனை இழந்த பெண்கள், கணவனை பிரிந்து தனிமையில் வாழும் பெண்களை குறிவைத்து இந்த நபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். தற்போது, அந்த வாலிபர் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வாலிபர், மேலும் பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுவதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)