Crime : பிறந்தநாளே, உயிர் பிரிந்த நாளாக மாறிய சோகம்.. ட்ரீட்டுக்கு அழைத்த நண்பர்களே கொன்ற கொடூரம்..!
மும்பையில் ரூ. 10,000 மதிப்புள்ள உணவு பில்லை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 20 வயது இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ரூ. 10,000 மதிப்புள்ள உணவு பில்லை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 20 வயது இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்மை கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொலை செய்த 4 பேர்களில் ஷாரூக் மற்றும் நிஷார் ஆகிய இருவரும் மேஜர் என்பதால் அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைத்தனர். மற்ற இரண்டு பேர் மைனர் என்பதால் சிறார் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
என்ன நடந்தது..?
கொலை செய்யப்பட்ட சபீர் அன்சாரி கடந்த மே 31 ம் தேதி சாலையோர உணவகம் (தாபா) ஒன்றில் தனது பிறந்தநாள் ட்ரீட்க்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த ட்ரீட்க்கு தனது நண்பர்கள் 4 பேரை சபீர் அழைத்ததாக கூறப்படுகிறது. அனைவரும் சந்தோஷமாக பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு முடித்ததும் தாபாவில் வேலை பார்க்கும் நபர், இவர்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதை பார்த்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த பில்லில் சுமார் 10,000 என இருக்கவே, சபீர் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே பணத்தை எவ்வாறு பிரிப்பது என்பதில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சபீரே இவர்கள் சாப்பிட்ட முழு பில்லையும் செலுத்தியுள்ளார்.
சபீர் பின்னர் தனது நண்பர்களிடம் குறிப்பிட்ட பணத்தையாவது தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணம் கொடுக்க மறுத்து அவரை மிரட்டியுள்ளனர்.
இந்தநிலையில், மே 31ம் தேதி இரவு 8 மணியளவில் சபீர், கோவண்டியில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் தனது பிற நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது, அந்த 4 நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சபீரை மோசமாக தாக்கியதுடன், கூர்மையான ஆயுதத்தால் அவரை தாக்கியுள்ளனர், இதில், சபீர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்து, பலத்தை காயமடைந்த சபீரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை சோதனை செய்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.
17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காவல்நிலையத்தில் சரணடைந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மேஜர் இருவருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் (ஐபிசி) 302 (கொலை) உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.